பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

259



செயல்பாடுகள் :

பத்திரிகை மன்றத்திடம் வரும் குற்றச் சாட்டுகளை விசாரித்து முடிவு கூறுவது. வரையறுத்த அதிகாரத்திற்குள் 1966-ஆம் ஆண்டு முதல் 1981 - வரையில் இந்த மன்றம் 880 குற்றச் சாட்டுக்களை விசாரித்து தீர்ப்பளித்திருக்கிறது.

இந்த 880 விசாரணைகளில், 214 குற்றங்கள் பத்திரிகைச் சுதந்திரம் பற்றியதாகும். அவற்றில் மத்திய - மாநில அரசுகள் மீது பத்திரிகைகள் சாட்டிய குற்றங்களும் சம்பந்தப் பட்டிருக்கின்றன.

தனி மனிதர்களும், நிறுவனங்களும், மத்திய மாநில அரசுகளும் பத்திரிகைகள் மீது 566 குற்றச்சாட்டுக்களைக் கூறியுள்ளன. இவற்றின் மீது பத்திரிகை மன்றம் எடுக்கும். முடிவுகளைச் செய்தித் தாட்கள் வெளியிடுகின்றன.

பத்திரிகையாளர்கள் பின்பற்ற வேண்டிய வழி முறைகள், பணி நோக்கங்கள் எதையும் பத்திரிகையாளர் மன்றம் வரையறுத்துக் கூறவில்லை.

காலப் போக்குகளில் வரும் வழக்குகளை விசாரித்துக் கூறுகின்ற தீர்ப்புகளின் அடிப்படையில் நெறிமுறைகளை உருவாக்க முடியும் என்று பத்திரிகை மன்றம் எண்ணுகிறது. அதற்குரிய வகையில் அந்த மன்றம் பொது மக்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையில் ஒரு பாலமாகப் பணியாற்றி வருகின்றது.

மதிப்பீடு :

பத்திரிகையாளர்களைக் கட்டுப்படுத்த, தண்டிக்க, போதுமான அதிகாரம் பத்திரிகை மன்றத்துக்கு வழங்கப்படவில்லை. அதனால்தான் பத்திரிகைகள் திறமையாகப் பணியாற்றிட முடியவில்லை என்று விவரம் புரிந்தோர் நினைக்கின்றார்கள்.

பத்திரிகையாளர் மன்றம் கால விழிப்புக்கு ஏற்றவாறு இப்போது செம்மையான பலத்தோடு இயங்கி வருகிறது.