பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

262

பத்திரிகை நடத்துவது எப்படி?


கழகப் பட்டங்கள் பெற்றிருக்க வேண்டும் போலவும், அல்லது ஜர்னலிசம் Journalism படித்தவர்கள் மட்டும்தான் பத்திரிகை நடத்தத் தகுதியுடையவர்கள் என்பதைப் போலவும், ‘சோ பத்திரிகை நடத்தலாமா?’ என்று கூட்டம் போட்டுக் கேட்கிறார்.

இந்தக் காலத்தில் யார் வேண்டுமானாலும் பத்திரிகை நடத்தலாம். மதம், சாதி, இனப்பற்றுக்காக; வழக்குச் சொல்லி வாதாடும் குறிக்கோளோடு ‘சோ’ தனது பத்திரிகையை நடத்தாமல் இருந்தால், உண்மையாகவே அவர் பத்திரிகைத் தொண்டர்தான் என்று மக்களால் மதிக்கப்படுவார்.

‘சோ’ சினிமா நடிகர். அவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனைப் போலத் தனது பத்திரிகையில் சமுதாயச் சீர்திருத்த இலட்சியங்களைப் பரப்புவாரா? அல்லது ‘துக்ளக்’ இன பண்புகளோடு தனது இன மானம் காக்க நடத்தப் போகிறாரா?

சோ : அப்போது எழுந்து குறுக்கிட்ட ‘சோ’, “கலைவாணர் சினிமாவிலே என்ன கிழித்துவிட்டார்?” என்று கோபமாகக் கேட்டார்.

கலைமணி : உடனே குறுக்கிட்டு, சினிமா நடிகனைக் கூத்தாடி என்று அருவருத்துப் பேசிய சமுதாயத்திலே, இன்று உம்மை இந்த மேடையிலே; சுயமரியாதையோடு, நடிகர் என்ற மரியாதையோடு பேச வைக்கும் சுயமரியாதையை இந்தச் சமுதாயத்தில் உருவாக்கியவர்களிலே கலைவாணர் ஒரு முன்னோடிக் கலைஞர் என்பதை நீர் நன்றியோடு உணரவில்லையா? என்றார்.

வாக்கு வாதங்கள் முற்றி அதிகமாகவே, தலைவர் எழுந்து, இப்போது அறந்தை நாராயணன் பேசுவார்’ என்றார்.

அறந்தை : தோழர் கலைமணி கருத்தை நான் ஆதரிக்கிறேன். ‘சோ’, தனது சாதிக்காக வாதாடாமல் பத்திரிகை நடத்துவேன் என்று இங்கே கூடியுள்ள மக்கள் எதிரே பிரமாண வாக்குமூலமாகக் கூறுவாரா? என்றதும் ஒரே கைத்தட்டல்!