பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

265


ஒற்றுமையை உருவாக்கி அவர்கள் உரிமைகளை உணர்த்தவா? மேடைப் பேச்சுக்களை மட்டுமே தேர்ந்து வெளியிடவா? மஞ்சள் ஏடா? இவற்றுள் எந்த வகைப் பத்திரிகையை நடத்தலாம்? எப்படி நடத்தலாம்? எதற்காக நடத்தலாம் என்ற துறை வகையை முடிவு செய்து தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

ஏன் இவற்றைக் கூறுகிறோம் என்றால், பத்திரிகை நடத்துவது புகழுக்காக, பதவிக்காக, பணத்துக்காக, வணிக நோக்குக்காகத்தானே! அதனால்தான் குறிப்பிட்டோம். அதெல்லாம் இல்லை, தொண்டுக்காக, இலட்சியத்துக்காக, பொழுதுபோக்குக்காக என்று எவராவது கூறினால், அவர்கள் இறுதியிலே கடனாளிகளாவர்; சொத்துக்களை அழிப்பர்; இகழைப் பெறுவர் உறவுமுறைகள் பகையைத் தேடி ஓட்டாண்டிகள் ஆவர்! எனவே, பத்திரிகை நடத்துவோர்க்கு அறிவு வளம், ஆதரவு பலம், பண பலம் ஆரம்பத்தில் வேண்டும். போகப் போக பத்திரிகைப் பலம் அவர்களை இமய உச்சியிலே கூட அமர வைக்கலாம்!

பத்திரிகைத் தொழில் பயங்கரமான தொழில் என்று நாம் பயங்காட்டுவதற்காக மேலே உள்ள விவரங்களைக் கூறவில்லை. முழுக்க முழுக்கத் திறமை பலம் திகழ்பவராக பத்திரிகையாளர் இருக்க வேண்டும்.

‘தினத்தந்தி’ குடும்பம், முரசொலி குடும்பம், ஆனந்த விகடன் குடும்பம், குமுதம் குடும்பம், தினமலர், தினமணி குடும்பம் அடுக்கடுக்கான வகைத் தொழிலில் வெற்றிக் கொடிகளைப் பறக்க விடவில்லையா?

அந்த இதழ்க் குடும்பங்களின் அறிவுரைச் சுவடுகளை ஏகலைவன் துரோணரிடம் கற்ற வித்தையைப் போல, நமது மனத்தில் நாம் பதிய வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே மேலே உள்ளவற்றை பாடமாக்கினோம்; படமாக்கவில்லை.