பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

311


களிலும், அவற்றுக்கு அமைச்சர்கள் அளிக்கின்ற விடைகளிலும் பற்பல தகவல்கள் கிடைக்கக் கூடும். அதனால் செய்தியாளர்கள் மிக எச்சரிக்கையாக இருத்தல் அவசியமாகும்.

ஜீரோ நேரம் என்றால் என்ன என்று வாசகர்கள் சிந்திக்கக் கூடும். அரசியல் சட்டத்தில் ஜிரோ நேரம் என்று ஒரு நேரம் ஒதுக்கப்படவில்லை. ஆனால், நாடாளுமன்றம், சட்டமன்றங்களும் கேள்வி நேரங்களை முடித்துக் கொண்ட பின்பு, உறுப்பினர்கள் தங்களது எண்ணத்திலெழும் கருத்துக்களில் எதனைப் பற்றியாவது விவாதிக்க, விளக்கம் கேட்க வேண்டுகோள் விடுக்கலாம். அதனால், இந்த நேரத்தை மன்றங்கள் ஒரு பொது நேரமாக ஏற்றுக் கொள்ளும் மரபாகி விட்டது.

அந்தந்த அவைகளில் உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வந்து முன் மொழிவார்கள். அவற்றுள் கவன ஈர்ப்பு தீர்மானம் (Calling Attention), ஒத்திவைப்புத் தீர்மானம் (Adjournment Motion), நம்பிக்கை இல்லாத தீர்மானம் (No-confidence Motion), கட்டுப்படுத்தும் தீர்மானம் (Censure Motion) போன்றவைகளும் உண்டு.

சட்டமன்ற உறுப்பினரோ, அமைச்சரோ கொண்டு வரும் பில்லுக்கு (Bill) மசோதா என்று பெயர். அதை முன்மொழிந்து விளக்குவது அவர்களது கடமைகளாகும்.

அவர்கள் கொண்டு வந்த தீர்மானங்களின் மசோதாக்கள் மீது விவாதங்களை உறுப்பினர்கள் நடத்துவார்கள். அந்த வாதங்களுக்குரிய பதிலை அமைச்சர்கள் கூறுவார்கள். தேவைப்பட்டால் வாக்கெடுப்பும் நடக்கும். இறுதியாக, தீர்மானங்கள் நிறைவேறி விடும்.

எல்லாவற்றையும், விட வரவு-செலவுத் திட்டங்களை அவையில் நிதியமைச்சர் வைப்பார். அதன்மீது உறுப்பினர்கள் விவாதங்கள் நடக்கும். இந்த நேரத்தில்தான் செய்தியாளர்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், பல முக்கியமான பிரச்னைகள், அதாவது வரி விதிப்பு, வரி விலக்குகள் போன்ற பிரச்னைகள் எழும்.

நாடாளுமன்ற, சட்டமன்றச் செய்திகளைச் செய்தியாளர்கள் எழுதும்போது, என்ன நடந்தது, ஏன் நடந்தது, எப்படி நடந்தது என்ற முழு விவரங்களைக் கவனத்தில் கொண்டு சட்ட முறைகளையும், நடைமுறைகளையும் கூர்ந்து சிந்தித்து எழுத வேண்டும்.