பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

312

செய்தியாளர் தவறு செய்தால் சட்டமன்றமே - நீதிமன்றமாகும்!



அவைத் தலைவர் நீக்கியச் செய்திகளை எல்லாம் செய்தியாளர்கள் சேர்த்து எழுதிக் கொண்டு, பத்திரிகையில் வெளியிட்டு விடக்கூடாது.

ஏனென்றால் சட்டப் பேரவையின் உரிமை மீறல் பிரச்னை வந்து விடும். அந்தப் பிரச்னைக்கு பேரவை அவமதிப்பு என்று பெயர்.

உரிமை மீறலுக்கு
ஓர் எடுத்துக்காட்டு

1967-ஆம் ஆண்டு சட்டமன்ற, நாடாளுமன்ற பொதுத் தேர்தல் தமிழ்நாட்டில் நடைபெற்றபோது, அறிஞர் அண்ணா அவர்கள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார்கள். எல்லாக் கட்சிகளும் அந்தக் கூட்டணியில் பங்கு பெற்று ஆளும் கட்சியை எதிர்த்துப் போட்டியிட்டன.

தமிழ்நாட்டின் சட்டப் பேரவைத் தொகுதிகளில் ஒன்று பெருந்துறை. அந்தத் தொகுதியில் சோசலிஸ்ட் கட்சியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர், தி.மு.க. சின்னமான உதயசூரியன் சின்னத்தில் நின்று தேர்தலில் போட்டியிட்டார். அந்தத் தொகுதி சென்னிமலைத் தொகுதியா? பெருந்துறை தொகுதியா என்பது நினைவில் சரியாக இல்லை.

ஒரு கட்சி, வேறொருக் கட்சி சின்னத்தில் போட்டியிடுமா என்று கேட்டு விடாதீர்கள். தமிழரசுக் கட்சி வைத்திருந்த சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம், முஸ்லீம் லீக் கட்சி உறுப்பினர், நாம் தமிழர் கட்சி நடத்திய தினத்தந்தி சி.பா. ஆதித்தனார் போன்றவர்கள் தங்களுக்குத் தோல்வி ஏற்பட்டு விடக்கூடாதே என்பதற்காக, மக்கள் செல்வாக்குப் பெற்ற உதயசூரியன் சின்னத்திலே 1967-ஆம் ஆண்டில் சட்டப் பேரவைக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் ஆவர்.

சில மாதங்களுக்குப் பிறகு, உதயசூரியனில் நின்று சட்டப் பேரவை உறுப்பினரானோமே என்பதை மறந்து, அண்ணா ஆட்சியைக் கடுமையாக விமர்சனம் செய்து சோசலிஸ்ட் கட்சிப் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசினார் - அந்த சோசலிஸ்ட் கட்சி உறுப்பினர்.

இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் அப்போது “மாலைமணி” என்ற நாளேட்டில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.