பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

316

பொதுக் கூட்டச் செய்தியாளர் உரை சுவையில் மயங்கிவிடக் கூடாது!


சமயச் சொற்பொழிவுகளும் நடைபெறுகின்றன. மேற்கண்ட எல்லாக் கூட்டங்களுக்கும், பொது நிகழ்ச்சிகளுக்கும், ஆன்மிக விழாக்களுக்கும் செய்தியாளர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

ஏனென்றால், அவரவர் மேம்பாட்டுக்குரிய கருத்துக்கள், பொது மக்களுக்குரிய ஊர் வசதிக்கான தேவைகள் அனைத்தும் அங்குப் பேசப்படலாம் அல்லவா? அவை அரசுக்கும் - பொது மக்களுக்கும் தெரிய வேண்டும் என்ற விருப்பத்தால் பத்திரிகைச் செய்தியாளர்களைத் தக்க மரியாதைகளுடன் கூட்டம் நடத்துவோர் அழைக்கின்றார்கள்.

அந்தக் கூட்டங்களுக்குச் செல்லும் செய்தியாளர், குறிப்பெடுக்கும் நோட்டுப் புத்தகம், சீவப்பட்ட கூர்மையான பென்சில்கள், மை நிரப்பப்பட்ட பேனாக்கள் அனைத்தையும் தவறாமல் கொண்டு சென்று, அவர்களுக்கென ஒதுக்கப் பட்டுள்ள கெளரவ இருக்கைகளில் அமர்ந்து, நடைபெறும் நிகழ்ச்சிகளை ஆரம்பம் முதல் முடியும் வரை யார், யார் என்னென்ன பேசுகிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

இருவகைப்
பேச்சாளர்கள்

பொதுவாக நிகழ்ச்சிக்கு வருவோர் அனைவருமே ஆற்றொழுக்காகப் பேசுபவர்கள் அல்லர்! சிலர் பேசுவதற்குக் குறிப்புடன் மட்டும் வந்து மேடையேறி அதற்கேற்றவாறு உரை முடிச்சுப் போட்டு அழகாகப் பேசுவார்கள். இது குறிப்புப் பேச்சாகும்.

வேறு சிலர், கூட்டத்திலே மேடையேறிப் பழகாததால், தங்களது பேச்சையே தயார் செய்து கொண்டு வந்து பேசி முடிப்பார்கள். இது தயாரிப்பு பேச்சு முறை.

சிறந்த பொழிவாளர்கள், மேடையேறியதும் மழை போல, தென்றல்போல, புயல் போல, பாடிப்பாடி, ஆடியாடி, கோடை இடி போல, ஏற்றப் பாட்டுகளைப் போல, பாட்டுக் கச்சேரிப் பாடகரின் ஆரோக, அவரோகண ஏற்றத் தாழ்வோசை-