பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



25


பதினாறு தகுதிகள் உள்ளவரே;
விளையாட்டுப் போட்டிச் செய்தியாளர்


த்திரிகை வாசகர்கள் பெரிதும் விரும்பிப் படிக்கும் சுவையான செய்திகளில், காதல் மட்டும் முக்கியமானதன்று; வீர விளையாட்டுச் செய்திகளில் வெளியிடப்படும் நுட்பங்களும் ஆகும்.

அதனால்தான் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வரும் தமிழ் மக்கள், வாழ்வியலை இரு கூறுகளாக்கி, அவற்றுள் ரத்தபாச உணர்வுகளை ஊட்டுவது அகம் என்றும், வீரம் விளைவிப்பது புறம் என்றும் கூறி வாழ்ந்து காட்டிப் புகழ் பெற்றார்கள். அதனால்தான் இந்தத் தமிழ் பண்பு வீரம் செறிந்த அறமறம் உடையதாக, மறஅறம் செறிந்ததாக மணந்து வருவதை இன்றும் நுகர்ந்து நாம் பெருமைப்படுகிறோம்.

பழந்தமிழர்கள் வீர விளையாட்டுகளில்- சிலம்பாட்டம், கில்லியாட்டம், கொம்பாட்டம், மற்போர், விற்போர், வாட்போர், கரகாட்டம், பரி போர், கரி போர், சேவல் போர், காளைப் போர், ஆடுகள் போர், ஏறு தழுவல் போர், அரிமா அடக்கல் போர், சடுகுடு வீரப்போர், கழைக் கூத்துப் போர் என்று பல வீர விளையாட்டுகள் தமிழர்களால் போற்றி வளர்க்கப்பட்டு வந்தன.

அந்த வீர விளையாட்டுகளில் ஒன்று கில்லியாட்டம்! கில்லி அடிக்கப்பட்டதும் வீரர்கள் ஓடி ஓட்டத்தைக் கணக்கிட்டு, அதிக ஓட்டங்கள் பெற்றவனே கில்லியாட்ட மறவனெனப் போற்றப்படுவான்.