பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

325



எனவே, விளையாட்டு நுட்பங்களை, விரிவான, சுவையான, நுட்பமான விறுவிறுப்பான, பரப்பரப்பான மொழி நடையில் எழுதிட தனித்திறமை பெற்றவர்களாக விளையாட்டுச் செய்தியாளர்கள் விளங்குகிறார்கள்.

தனித் திறமையுடன் இவ்வாறாகப் பத்திரிகைகள் விளையாட்டுச் செய்திகளைத் தொடர்ந்து வெளியிடுவதால் அதற்கான வாசகர்களும் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறார்கள்.

கிரிக்கெட் விளையாட்டுக்களை முன்பெல்லாம் வானொலிகள் வருணனைகளோடு வெளியிட்டன. இப்போது அந்தப் பணியைப் பத்திரிகைகள் மேற்கொண்டு விட்டன. இவற்றை எல்லாம் கேட்க, படிக்க வாசர்களுக்கு நேரம் போதாதக் குறையாகி விட்டது. அவ்வளவு Sportmanகளாக, விளையாட்டில் அக்கறை காட்டுபவர்களாக மாறி விட்டார்கள் வாசகர் என்றால் மிகையன்று.

செய்தியாளர்க்கு
தகுதிகள் சில

விளையாட்டுச் செய்திகளைச் சேகரிப்பவர்கள், விளையாட்டுகள் சிலவற்றைப் பற்றிய முழு விவரங்கள், அதற்கான சட்ட திட்ட விதிகள், நுட்பங்கள், விளையாடும் அறிவுத் திறமைகள், அவற்றை வாசகர்களுக்கு விளக்கிக் கூறும் சுவை நுட்பங்கள் அனைத்திலும் தேர்ந்தத் திறமையாளராக இருக்க வேண்டும். இருந்தால், பத்திரிகை விற்பனைப் பல்கிப் பெருகிவிடும்.

விளையாட்டு வீரர்கள் யார்? அவர்களது விளையாட்டுத் திறன்கள் என்ன? திறன்களால் முன்பு பெற்ற வெற்றி விவர வரலாறுகள், பெற்றிட்ட விருது விவரங்கள், ஏன் பெற்றார்? எப்படிப் பெற்றார்? எங்கே பெற்றார்? எப்போது பெற்றார்? என்ற விருது நுட்ப நிகழ்வுகள் போன்றவற்றை எல்லாம் விளையாட்டுச் செய்தியாளர் தெரிந்துள்ளவரானால் அவருக்கும் புகழ் விளையும்.