பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



27


எழுத்துரிமை, பேச்சுரிமைகளைக் காக்க
கட்சிப் பத்திரிகைகள்
நடத்துவது எப்படி?


ந்தியா மக்களாட்சி நடைபெறும் மிகப் பெரிய நாடு. ஏறக்குறைய 110 கோடி மக்கள் மத நல்லிணக்கத்தோடு ஒன்றி வாழும் சுதந்திர நாடு. இந்த நாட்டின் ஒவ்வொரு ஆட்சி முறைத் திட்டங்களும் மக்களுக்கு, மக்களுக்காக, மக்களால் நடத்தப் படுபவைகளாகும்.

இந்த நாட்டில் பல கட்சிகள் இயங்குகின்றன. ஒவ்வொரு கட்சியும் அவற்றின் கொள்கைகளை, செயற்பாடுகளை, அவற்றால் நாடு மேம்பாடடைவதை தங்களது பத்திரிகைத் தொண்டுகளால் பொது மக்களுக்கு நாள்தோறும் விளக்கிக் கொண்டிருக்கின்றன. இந்தக் கட்சிகளில் ஆளும் கட்சி, எதிர்க் கட்சிகள் என்ற பிரிவுகள் இருக்கின்றன.

அகில இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சி இந்தியாவின் பெரிய கட்சி மட்டுமன்று; எல்லாக் கட்சிகளுக்கும் மூத்தக் கட்சி. முதன் முதலில் தோன்றிய கட்சி என்பதால் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும், அகில இந்திய அளவில் நன்கு வளர்ச்சிப் பெற்றக் கட்சியாக அது விளங்குகின்றது. மற்ற அகில இந்திய சிறிய கட்சிகளும் இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவை கம்யூனிஸ்ட் கட்சிகள், பாரதீய ஜனதா போன்ற வேறு சிலவாகும்.