பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

339


செல்வாக்கோடு பலம் பெற்றிருந்தது. 1967-க்கு பிறகு இன்று வரை தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க.வுக்கு அடுத்தப் படியாக, வளர்ச்சியுடையக் கட்சியாக, தமிழ்நாட்டுச் சட்டப் பேரவையின் எதிர்கட்சி என்ற பலத்தோடு காங்கிரஸ், அரசியல் கட்சியாக நடமாடுகிறது.

பெருந் தலைவர் காமராசர் அவர்கள் செல்வாக்குறும் காலத்துக்கு முன்பு, ‘நவசக்தி’ என்ற தேசிய நாளேடுக்குத் தமிழ்த் தென்றல் திரு.வி.கலியான சுந்தரனாரை ஆசிரியராகக் கொண்ட கட்சிப் பத்திரிகையாக அது தொண்டாற்றியது. அதே ‘நவசக்தி’ பெருந்தலைவர் காலத்திலும் தனுஷ்கோடி என்ற காங்கிரஸ் தலைவரால் காங்கிரஸ் கட்சிக்காக 1975-ம் ஆண்டு வரை நடைபெற்று வந்தது.

கம்யூனிஸ்ட் கட்சிக் கொள்கைகளைப் பரப்பிட ‘ஜனசக்தி’ என்ற நாளேடு உழைத்து வந்தது. இப்போது ‘தீக்கதிர்’ என்ற நாளேடு அந்தக் கட்சிக்காக அற்புதமாகப் பணியாற்றி வருகின்றது.

‘முரசொலி’, கலைஞரால் அவருடைய பள்ளிப் படிப்புக் காலத்திலேயே கையெழுத்து ஏடாகத் துவக்கப்பட்டு, ஏறக்குறைய 55 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் ஒரே ஒரு தி.மு.கழகக் கொள்கைகளின் ஒலியாக முரசுக் கொட்டி வருவதை இன்றும் நாம் கண்டு வருகிறோம். எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டு முதல் அமைச்சராக ஆவதற்கு முன்பு, ‘அண்ணா’ என்ற நாளேடு ஒன்றை அவரது அரசியல் வளர்ச்சிக்காகத் துவக்கப்பட்டு நடைபெற்று வந்ததை நாடறியும்.

‘நமது எம்.ஜி.ஆர்’ என்ற நாளேடு, செல்வி ஜெயலலிதா அவர்களால் நிறுவப்பட்டு, அதுவும் கால் நூற்றாண்டாக நடந்து வருகின்றது. அந்த தின ஏடு அண்ணா தி.மு.க.வுக்காக எம்.ஜி.ஆர். பெயரால் நடைபெற்று வரும் கட்சிப் பத்திரிகை ஆகும்.

தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்ட ‘விடுதலை’ நாளேடு, திராவிடர் கழகக் கொள்கைகளைப்