பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

351



அன்றாட நடப்புகளை
அறியும் பேட்டி

தமிழ்நாட்டில் ‘கம்ப ராமாயணத்தையும், பெரிய புராணத்தையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டும்’ என்றார் தந்தை பெரியார். அதற்கான வாதப் பிரதிவாதங்கள், பத்திரிகைப் போராட்டங்கள், மேடைப் போர்கள் எல்லாம் நடந்து கொண்டிருந்தன! ஆத்திக நாத்திக அனலாறுகள் ஓடிக் கொண்டிருந்தன.

நாவலர் சோம சுந்தர பாரதியார், சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை போன்றவர்கள் எல்லாம் சேலத்திலும் சென்னையிலும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா கருத்துக்களை எதிர்த்து தங்களது அறிவாராய்ச்சிக்களை அரங்குகளிலே சொற்போராகத் தொடுத்தார்கள். அறிஞர் அண்ணா அவர்கள், போர் தொடுத்தத் தமிழ் அறிஞர்களை எதிர்த்து மேற்கண்ட இருநகர சொற்போர்களிலும் வாதப் போர் நடத்தினார்.

அந்த நேரத்தில் அண்ணல் காந்தியடிகள் சென்னையிலுள்ள இந்திப் பிரச்சார சபை விழாவுக்கு வந்திருந்தார். அடிகள் காலையிலும், மாலையிலும் தினந்தோறும், ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ பாடலைப் பாடி ராம பஜனை செய்யும் பழக்கமுடையவர் என்பது இந்திய மக்கள் அறிந்த செய்தி.

மகாத்மா அவர்கள் இந்திப் பிரச்சார சபை விழாவில் பேசி முடித்த பின்பு, அவரைச் சென்னைப் பத்திரிகைச் செய்தியாளர்கள் கூட்டமாக அணுகி, ‘தமிழ்நாட்டில் இராமயணத்தைக் கொளுத்த வேண்டும்’ என்று பெரியார் இராமசாமி கூறுகிறார். ராம பக்தரான நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?’ என்று அப்போதைய நாட்டின் பரபரப்பு சூழ்நிலைக்கு ஏற்றவாறு காந்தி அண்ணலிடம் கேள்வி கேட்டார்கள்.

அதற்கு அண்ணல் காந்தி, ‘நான் வணங்குவது தசரதன் மகன் இராமனை அல்ல; சீதையின் கணவன் ராமனை அல்ல’ என்று சுருக்கமாக இரண்டே வாக்கியங்களில் பதில் கூறினார்!