பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

359



நிறுத்தக் குறிகள்

தற்காலச் செய்தியாளர்களும், பத்திரிகை ஆசிரியர்களும் எழுதும் வேகத்தில் எங்கெங்கே என்னென்ன நிறுத்தற் குறிகளை வைக்க வேண்டும் என்பதையும் மறந்து விடுகிறார்கள். அந்தக் குறிகள் இல்லாமையால், சுக்கு, மிளகு, திப்பிலி என்று படிக்க வேண்டிய வாசகங்கள் ‘சுக்குமி, ளகுதி, ப்பிலி’ என்று அனர்த்தமாகப் படித்துக் குழப்பம் அடையும் நிலை உண்டாகின்றது. அதனால், நிறுத்தக் குறிகளை எழுதுவதற்கு இது ஒரு பயிற்சியாகவும் இருக்குமல்லவா?

நாம் பேசும்போது கருத்து முடிகிற இடத்தில் பேசுவதைக் கொஞ்சம் நிறுத்துகிறோம். கருத்து முடிந்தாலும் சரி, முடியாமல் போனாலும் சரி, சில இடங்களில் நிறுத்தம் செய்கிறோம். கேள்வி எழுப்பும் போதும், ஆச்சரியப்படும் போதும் பேசும் பேச்சைக் கொஞ்சம் இழுத்து அல்லது எடுத்து நிறுத்துகிறோம்.

பேசும்போது உண்டாகும் இந்த நிறுத்தக் காலத்தை, எழுத்தில் சில குறிகள் போட்டுக் காட்டுகிறோம். இவைதான் நிறுத்தற் குறிகள் ஆகும்.

முற்றுப் புள்ளி (.)

எழுதும் வாக்கியத்தின் முடிவைக் காட்டுவதற்காக, முற்றுப் புள்ளி (.) வைக்கின்றோம். இந்த முற்றுப் புள்ளி வைத்த இடத்தில் நான்கு மாத்திரை நிறுத்த வேண்டும் என்பது பொருளாகும். இது முற்றுப் புள்ளிக்குரிய கால அளவு.

மாத்திரை என்றால் என்ன? இதைச் செய்தியாளர்கள் பள்ளிக் கல்வியில் கற்ற ஒன்றுதான். ஆனால் அது, மனதை விட்டு மறைந்திருக்கக் கூடும்.

எனவே, மாத்திரை நேரம் என்றால், விரலை சொடுக்கும் அல்லது நெட்டை ஒடிக்கும் ஒசை வரும் நேரம். அல்லது கண் இமை, இமைக்கும் நேரம். இந்த நேரம் தான் மாத்திரை எனும் நேரத்தின் கால அளவு. எனவே, முற்றுப் புள்ளி உள்ள