பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

366

அச்சுப்படி திருத்துதலும் அவற்றுக்கான குறியீடுகளும்!


இரண்டு இட்லியுடன் வடை ஒன்றையும் வைத்துக் கொடுக்குமாறு நடைமேடை பலகாரம் விற்பவரிடம் கூறிப் பணமும் கொடுத்தார். அந்தச் சிறுவன் படிக்க வேண்டிய பருவத்தில் இப்படிப் பிச்சை எடுத்துப் பிழைக்கின்றானே என்று அவர் மனம் வருந்தினார்.

இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பத்திரிகைச் செய்தியாளர், அந்த நிகழ்ச்சியை அப்படியே எழுதி, அன்றைய நாளேடு ஒன்றுக்குச் செய்தியாக அனுப்பினார். அவர் ஒரு பிரபலமான ஆளும் கட்சித் தலைவர் என்பதால், அவருடைய கருணை உள்ளத்தைப் பாராாட்டி இரக்க உணர்வோடு, “ஆளும் கட்சித் தலைவர் பிச்சை எடுக்கும் சிறுவனின் பரிதாப நிலையைக் கண்டு கதிரவனைக் கண்ட கமலம் போல மனம் கூம்பினார்” என்று செய்தி அனுப்பினார்.

அந்தச் செய்தி மறுநாள் காலைப் பதிப்பு நாளேட்டில் ‘கூ’ம்பினார் என்ற எழுத்திருந்த இடத்தில், ‘கூ’ வன்னாவுக்குப் பதிலாக, ‘ஊ’வன்னா வைப் போட்டு வந்து விட்டது. இந்தச் செய்திப் பிரச்னை பத்திரிகைக்குக் கெட்ட பெயரை உருவாக்கியதோடு நில்லாமல், அந்த அச்சுப்படியைப் பிழை திருத்தம் செய்வோரை வேலையை விட்டும் நீக்கி விட்டது.

இதை ஏன்? இங்கே சுட்டிக் காட்டுகிறோம் என்றால், ஒரு பத்திரிகையில் இப்படிப்பட்ட பிழைகள் வருமானால், அதனால் பத்திரிகைக்கு மக்களிடம் கெட்ட பெயர் உண்டானதோடு நில்லாமல், கட்சி அணிகள் தகராறுகளும் உருவாகின்றது. இதனால் செய்தியாளருக்கும் கெட்ட பெயர், கட்சியிலும் குழப்பம், பிழைத் திருத்துவோரும் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலைகள் ஏற்பட்டு விட்டன.

எனவே, கூடுமானவரைப் பிழைகள் மலியாமல் பத்திரிகை வெளிவர வேண்டும் என்ற அச்சமும், பிழை திருத்தும் பிரிவுக்கு உண்டாகி விட்டது. அதனால்தான் பிழை திருத்துவோர் மொழி அறிவு உள்ளவராக இருக்க வேண்டும் என்ற நிலை அவசியமாகின்றது.