பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

367



அச்சுப்படி திருத்துவோர் எழுத்துப் பிழையைப் பார்ப்பதோடு நில்லாமல், செய்தியின் தலைப்பு, கொடுக்கப்பட்ட விவரங்களில் முரண்பாடுகள், எங்காவது சொற்கள், எழுத்துக்கள் மாறி இருக்கின்றனவா? மூலத்திலும், ஃப்ரூப்பிலும் வாசகங்கள் சரியாக உள்ளதா? அர்த்தம் அனர்த்தமாக மாறியுள்ளதா? புள்ளி விவரங்களைச் சரியாக அச்சுக் கோர்க்கப்பட்டிருக்கின்றதா என்பதை எல்லாம் எச்சரிக்கையோடு கவனிக்க வேண்டும். அது அவர்களது உயிரினும் மேலான கடமையுமாகும்.

அச்சுப்படி திருத்தும்போது, ஒருவர் மூலத்தை உரக்கப் படிக்க வேண்டும். மற்றவர் அதைத் திருத்த வேண்டும். திருத்தும்போது படியின் ஓரங்களில் Margin உள்ள இடத்தில் உரிய திருத்தக் குறிகளைச் சந்தேகத்திற்கு இடமில்லாமல் போட்டுத் திருத்த வேண்டும்.

என்ன அச்சுப் பிழை வந்துள்ளது என்பதைப் பிழைத் திருத்துவோர்க்குரிய குறிகளிட்டும், கோடுகளிட்டும் பக்க ஓரங்களில் சுட்டிக் காட்ட வேண்டும். இது செய்தித் தாள் திருத்தும் வழக்கமாகும்.

ஒரு வாக்கிய வரியில் செய்கின்ற திருத்தம் பின்னால் வரும் வரிகளின் அமைப்புக்குப் பாதிப்பு ஏற்படாமல் திருத்த வேண்டும். எந்த வாக்கியத்தில் தவறோ அந்த வரிக்கு நேராகப் பிழையைக் குறித்துச் சரியானதை எழுத வேண்டும். பிழையின் மேலேயே திருத்தம் செய்யக் கூடாது. அது பிழைத் திருத்தும் முறையும் அன்று.

பொதுவாக, ஒரு வரியின் இடது பாதியில் பிழை இருந்தால், திருத்தத்தை இடது பக்க ஓரத்திலும், வலது பாதியில் தவறிறிருந்தால் திருத்தத்தை வலது பக்க ஓரத்திலும் குறிக்க வேண்டும். இதுதான் பிழை திருத்தும் வழக்கமான முறை.

பிழைகளைக் கோடிட்டுக் காட்டும் போது, மேலும் கீழுமுள்ள வரிகள் மேல் கோட்டை இழுத்துச் சென்று காட்டக் கூடாது. இரண்டு வரிகளுக்கும் நடுவே கோடிழுத்துச் சென்று ஓரத்தில் எது தவறோ அதைக் குறிப்பிட வேண்டும்.