பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

386

பத்திரிகையாளர்களுக்கு திரு.வி.க. தமிழ்நடை அனுபவங்கள்!


சக்தியின் வல்லமையை மறந்து விட்டாரோ, என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு, அவர் எழுத்தில் பக்தியும், பழமையும் பதிந்திருந்தன.

பழைமையில் அவர் கொண்டிருந்த பக்தி, இன்றைய நாகரிகத்தில் அவருக்கு வெறுப்பை மூட்டியது. தற்கால நாகரிகம் பேயாக நமது தேசத்தைப் பிடித்தாட்டுகிறது. விஷமாக நமது தேசத்தை எரிக்கிறது. பூதமாக நமது தேசத்தை விழுங்குகிறது. தற்கால நாகரிகத்தை வெட்டிச் சாய்க்க வேண்டுவது நமது கடமை என்று 7.1.1919 இதழில் எழுதிய தலையங்கம், தகைமைசால் நெறி, தர்மவெறியாகவும், பழமையில் கொண்ட நாட்டம், புதுமை அனைத்தும் சுட்டெரிக்கும் காட்டாமாகவும், மரபில் கொண்ட பிடிப்பு, முற்போக்கை எதிர்க்கத் துணியும் பிடிவாதமாகவும், பிற்போக்காகவும், வலுத்து விடுமோ என்ற அச்சத்தை ஊட்டும் அளவுக்குச் செல்கிறது.

பண்டைக் காலத்தில் சூரன், இராவணன் முதலிய ஒரு சில இராட்சதரிருந்தனர். இப்பொழுதோ வீடுகள்தோறும் இராட்சதர்கள் இருக்கின்றார்கள். இராட்சதர் என்போர் யாவர்? என்றும் பிறர்க்குத் தீங்கிழைப்பவர். பிறரை அடக்கியாள வேண்டுமென்று நினைப்பவர்; காம குரோத முதலிய தீக்குணங்கள் நிரம்பப் பெற்றவர் இன்னோர் இராட்சதர் எனப்படுவர். இவரல்லாத பிறரே அந்தணர் என்போர்’ என்று 8.11.1918-இல் அவர் தலையங்கத்தில் எழுதியது சன்மார்க்க உபதேசமாக அமைகிறதே ஒழிய, சமுதாய அநீதிகளுக்கு முழு விளக்கம் தருவதாயில்லை என்று குறைபடுவதற்கு இடமுண்டு.

‘மஹரிஷிகளே! நவநாத சித்தர்களே! எங்கிருக்கின்றீர்கள்? உலகத்தில் இராட்சத குணம் பெருகுகிறதே. நீங்கள் கருணை செலுத்த வேண்டிய காலமிதுவே’ என்று அவர் நெஞ்சுருக வேண்டுகையில், சமுதாய அரக்கர்களை வீழ்த்த ஜன சக்தியை நம்புகிறாரா அல்லது ஞான ரிஷிகளைத் தேடுகிறாரா, அரசியலை அணுகுகிறாரா அல்லது அவதாரங்களை அழைக்கின்றாரா, சம தர்மத்தை நாடுகிறாரா அல்லது சாத்திரங்களில் சரணாகதி அடைகிறாரா என்ற ஐயப்பாடு எழத்தான் செய்கிறது.

இந்தியா மந்திரியாகிய மிஸ்டர் மான்டேகு நம்தேசத்தில் விஜயம் செய்திருக்கின்றார். இங்கிலாந்திலுள்ள தொழிற்கட்சிக்-