பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

394

வடசொல்நீக்கி, தனித்தமிழ் எழுதிட மறைமலையடிகளின் மொழி ஆய்வுக் கட்டுரை!



சான்றாக சில நூற்றாண்டுகட்கு முன்பு முகமதியர் ஆட்சியின்போது, அவர்கள் தம் தாய்மொழியாகத் - தெய்வ மொழியாகப் போற்றிய அரபுச் சொற்களும், உருது, இந்திக் சொற்களும் தமிழில் ஏராளமாய்க் கலந்தன என்பதற்கு சில சான்றுகள் இதோ :

‘ஜமீன்தார், மிராஸ்தார், தாலுக்கா, ஜில்லா, முன்சீப், ஜட்ஜ், கச்சேரி, அயன், ரயத், ஜமா பந்தி, அலமார், மேசை, காடிகானா, நாஸ்தா, சலாம், ஜபர்தஸ்து, படே’

போன்ற ஏராளமானச் சொற்கள் தமிழில் கலந்துள்ளன. இவை சிலவே ஆகும்.

தொல்காப்பியத்திலும், திருக்குறளிலும் உள்ள சொற்கள் யாவும் தமிழ் சொற்களே என்பது மொழி ஆய்வாளர்களது கருத்து. நம் கருத்தும் அதுவே.

எனினும், வடமொழிப் பித்தர்கள் நூற்றுக்கு ஐந்து அல்லது ஆறு வடச் சொற்கள் அவற்றில் உளவென்பர். அவை வடமொழி தாம் என்பதற்குப் போலிக் காரணங்கள் காட்டுவர்.

ஆனால், வடமொழியில் ஒரு தமிழ்ச் சொல்கூட இல்லை என வழக்கிடுவர். அவர் கண்களுக்கு எல்லாம் வட மொழிச் சொற்களே. ஆம். பிறமொழிச் சொற்களே அவர்க்குக் கூடாதல்லவா?

சங்க நூல்களில் வடசொற்கள் மிகச் சிலவே. சங்க காலம் ஏறத்தாழ இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு.

சங்க காலத்தை ஒட்டித் தொடர்ந்த நூற்றாண்டுகளில் தமிழிற் கலக்கப்பட்ட வடமொழிச் சொற்களின் தொகை மிகுந்து கொண்டே வந்து, மணிப் பிரவாள நடை தோன்றிய 14, 15, 16 ஆம் நூற்றாண்டுகளில், தமிழில் 100க்கு 60,70 வடசொற்கள் கலந்து, தமிழ்மொழியின் உருவத்தையே மறைத்து விட்டன.