பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

404

வள்ளலார் இலக்கண நுட்பமும் தேவை!



இது வள்ளலார் ஆய்வு

“தொண்ணூறு”, “தொள்ளாயிரம்” என்னும் சொற்றொடர்களில், ‘தொல்’ என்பது அமைந்துள்ளதாக வள்ளல் பெருமான் எண்ணுகிறார்.

“தொல் நூறு = தொண்ணூறு, தொல் + ஆயிரம் = தொள்ளாயிரம்” எனவும், ‘தொல்’ என்பது ஒன்று குறையத் தொக்கியது எனவும், ‘தொண்மை, தொல் எனப் பிரிந்தது.

வழக்கத்தில் தொள்ளாயிரம், தொண்ணூறு என மருவியது எனவும், ‘பத்திடத்திற்கு குறைந்த முன் ஆயிரம் என்றும், ஒன்று குறைந்த பத்தென்றும் ஒருவாறு கொள்க’ என்று வள்ளலார் கூறுகின்றார்.

இப்போது வள்ளலார் எண்ணத்தைச் சிந்திப்போம். ஒன்று குறைந்த பத்து ஒன்பது ஆகிறது. இங்கும் தொல் என்பதை வரவழைத்துக் கொள்ளலாம். தொல் + பத்து = தொன்பது என மாறிய பின், ஒன்பது என மாறலாம். தெலுங்கு மொழியில் ஒன்பது என்பதைத் ‘தொம்மிதி’ என இன்றும் கூறுகிறார்கள்.

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் கூறுவது போல, தொண்டு + நூறு என்னும் சொற்கள் இணையும்போது, தொண்டு என்னும் சொல்லிலுள்ள டுகரம் கெடுகிறது. அப்போது தொண்+நூறு, தொண்ணூறு என மாறலாம். ஆனால், இதே விதி, ‘தொள்ளாயிரம்’ எனும் தொடருக்குப் பொருந்துவதில்லை.

தொண்டு + ஆயிரம் என்னும் சொற்கள் இணையுமிடத்து, டு என்னும் எழுத்து கெடுமிடத்து, தொண்+ஆயிரம் = தொண்ணாயிரம் என ஆக வேண்டும். இப்போதும் எட்டு+ஆயிரம் என்னும் சொற்கள் புணர்ந்தவிடத்து எண்ணாயிரம் எனக் கொள்கிறோம். இது போன்றே தொண்ணாயிரம் எனவும் கூறி வந்திருக்கலாம். ஆனால், இவ்வாறு கூறுதல் வழக்கமில்லை. இந்த நிலையில், வள்ளலார் கூறுவதில் உண்மை என்ன என்று சிந்திப்போம்.