பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

உலக நாடுகளில் உருவான பத்திரிக்கை வளர்ச்சிகள்


அவரைப் பாராட்டிப் பெருமையோடு நோபல் பரிசினை வழங்கியது.

ஜெர்மன் பத்திரிகை
ஆசிரியர் ஹெஸ்ஸி

ஜெர்மனியில் உள்ள ஊர்ட்டன் பர்க் மாநிலத்தின் கறுப்புப் பட்டணம் என்ற நகரில் 2.7.1877-ஆம் ஆண்டு பிறந்தவர் ஹெர்மான் ஹெஸ்ஸி Hermann Hesse என்பவர்.

ஹெஸ்ஸி தந்தை மதகுரு. தனது தந்தையைப் பின்பற்ற விரும்பாத அவர், புத்தகக் கடையிலும், கடிகாரம் பழுது பார்க்கும் கடையிலும் பணியாற்றினார். புத்தகக் கடை விற்பனையாளராக ஹெஸ்ஸி இருந்தபோது, ஜெர்மானிய பேரறிஞர் கொதே நூல்களைப் படித்த பின்பு, அவருக்கும் எழுத்தாளராக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

‘மார்ஸ்’, Marss என்ற பத்திரிகையில் ஹெஸ்ஸி இணையாசிரியராகச் சேர்ந்து, கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதி வந்தார். அவரது எழுத்துக்கள் கல்வியாளர்களையும், பாமரர்களையும் ஈர்த்தன. அந்தப் பத்திரிகையில் அவர் தொடர்ந்து எழுதி வந்த ‘ஜெர்ட்ரூட்’ என்ற நாவல் புத்தகமானது. அதனால் அவர் உலகப் புகழ்பெற்ற பத்திரிகை எழுத்தாளரானார்.

இந்தியாவுக்கு 1911-ஆம் ஆண்டு ஹெஸ்சி வந்தார். இந்தியப் பத்திரிகைகளில் 0ut of India என்ற பெயரில் கதை, கட்டுரைகள், கவிதைகள் எழுதியதால் இந்திய மக்கள் இடையேயும் அவரது செல்வாக்குப் பரவியது.

ஹெர்மான் ஹெஸ்ஸி தனது வாழ்நாள் முழுவதும் இலக்கியப் படைப்பாளியாகவே ஜெர்மானியில் வாழ்ந்தார். அப்போது கொதே பரிசு, கார்ட்ரைட் கெல்லர் பரிசு, பெர்லின் பல்கலைக் கழகச் சிறப்பு டாக்டர் விருது அத்தனையும் பெற்ற ஹெஸ்ஸி, 1946-ஆம் ஆண்டில் நோபல் பரிசையும் பெற்றார். இவரது இலக்கியங்கள் எல்லாம் உலக முக்கிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டதால், ஹெஸ்சிக்கு உலகம் முழுவதும் வாசகர்கள் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.