பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

உலக நாடுகளில் உருவான பத்திரிக்கை வளர்ச்சிகள்


அத்தனைப் பண்புகளும் ஓருருவாய் அமைந்த மனித நேயப் பத்திரிகையாளராக வாழ்ந்து காட்டிய மேதை அவர்.

பிராங்க்லின் 1729-ஆம் ஆண்டு முதல் 1756-ஆம் ஆண்டு வரை ‘பென்சில்வேனியா கெசட்’ என்ற புத்திரிகையை துவக்கி வெற்றிகரமாக நடத்தினார். அந்த இதழில் மக்களுக்கு இன்பம் ஊட்டும் கட்டுரைகளையும், கடிதக் கட்டுரைகளையும், மக்கள் நலனுக்காக பல திட்டங்களையும் எழுதினார்.

நகர்புற காவற்படை அமைப்பு, தெருப் பெருக்கும் திட்டம், வீதிகளுக்கு கற்கள் பாரவுந் திட்டம். உலாவியல் நூலகத் திட்டம், நகர் கட்டடத் திட்டம் ஆகியவற்றுக்கான திட்டப் பணிகளைத் தனது பத்திரிகையில் மக்களுக்கு அறிவித்து அவற்றுள் ஈடுபட்டார்.

பிராங்லினுடைய எழுத்தாண்மைத் திறத்தாலும், பத்திரிகை நடத்தும் புதுமைகளாலும் மக்களிடம் வரம்பு மீறிய செல்வாக்கைப் பெற்றார்.

அமெரிக்க நாட்டில் முதல் நகர மருத்துவமனை, முதல் அறிவராய்ச்சிக் கழகம், முதல் பல்கலைக்கழகம் ஆகியவை அவரது பத்திரிகை முயற்சிகளால் ஆரம்பிக்கப்பட்டன.

‘ஜெனரல் மாகசீன்’ ‘General Magazine’ என்ற ஒரு திங்கள் பத்திரிகையையும், பிராங்க்லின் துவக்கி நடத்தினார்.

அமெரிக்கா அப்போது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்ததால், அந்த அரசின் பிற்போக்கு நடவடிக்கைகளை எதிர்த்தும், நையாண்டிக் கட்டுரைகள் மூலமாக ஆங்கில ஏகாதிபத்தியத்தைச் சாடியும் எழுதினார். இதனால், பிரிட்டனின் பெரும் அறிஞர்கள், சிறந்த எழுத்தாளர்கள், அரசியல் நிபுணர்கள் நட்புகள் அவரைத் தேடி வந்து சந்தித்தன.

அமெரிக்கக் குடியேர்ற நாடுகளுக்குக் கூட்டாட்சி தேவை என்று தனது பத்திரிகையில் எழுதி, அதற்கான திட்டமும் கொடுத்தார். அமெரிக்க அஞ்சல் நிலையத் தலைவரானார். பென்சில்வேனியா நகராட்சி தலைவரானார். அமெரிக்காவில் அடிமைத் தளையை ஒழிக்க பிராங்க்லின் திட்டம் வகுத்துச் செயல்பட்டார்.