பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

இந்தியாவில் - இதழியல் கலை தோற்றம் வளர்ச்சி தொண்டு



முகலாயர்கள் ஆட்சிகளிலும், செர்ஷா போன்ற முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் அரசுகளிலும் செய்திகளை அனுப்புவதற்கென்ற ஓர் எழுத்தாளர் துறை இருந்துள்ளது. இவர்கள் அரசுச் செய்திகளை அறிவிப்பவர்களாகையால், முகலாயர் காலத்தில்: குறிப்பாக பேரரசன் ஒளரங்கசீப் ஆட்சியில் மன்னன் ஆணைக்கேற்ப சுதந்தரமாகச் செயல்பட்டார்கள்! எனவே, செய்தித் துறைக்கும் முழுச்சுதந்திரம் வேண்டும் என்பதை முகலாயர் பேரரசுகள், குறிப்பாக மாமன்னர் அக்பர் ஆட்சியில் இருந்ததாக அறிகின்றோம்.

இவ்வாறு இந்திய அரசுகள் செய்திகளை அனுப்பிய விவரத்தை; அப்போது வெள்ளைக்காரப் பாதிரியாக சமயத் தொண்டு செய்ய வந்த ஸ்காட்லாண்டு நாட்டைச் சேர்ந்த இராபர்ட் வில்லியம் என்பாரும், பிரெஞ்சு மருத்துவராக இருந்த பிராங்கே பெர்னியர் என்பவரும் “S. Arasarathnam; Merchants Companies and come in Coramandel 1600 - 1740 Cambridge” என்ற நூலில் எழுதியுள்ளார்கள்.

இராபர்ட் கிளைவ் இந்தியா வந்தபோது, கிழக்கிந்தியக் கம்பெனி எவ்வாறு இந்தியாவில் இயங்குகின்றது என்பதை, அப்போதிருந்த சில செய்தி எழுத்தாளர்களின் உதவியால், அவ்வப்போது கடிதங்கள் மூலமாகத் தங்களுக்குத் தேவையான வசதிகளை வருவித்துக் கொள்ளவும், இங்குள்ள அவர்களது சூழ்நிலைகளை விளக்கியும், செய்திப் போக்குவரத்து செய்து கொண்டார்கள்.

கிறித்துவ சமயத் தொண்டாற்றி வந்த டேனிஷ்காரர்கள், தங்களது விவிலிய நூலை அச்சடிக்கத் தஞ்சை மாவட்டத்திலே உள்ள தரங்கம்பாடி என்ற கடற்கரை ஊரிலே 1713-ஆம் ஆண்டில் அச்சகத்தை ஆரம்பித்தனர். அதற்கான அச்சுத்தாள் உருவாக்கும் நிறுவனத்தை 1715-ஆம் ஆண்டில் தரங்கம்பாடிக்கு அடுத்துள்ள பொறையார் என்ற ஊரில் நிறுவினார்கள். ஆனால், அவர்களால் விவிலிய நூலையோ அல்லது கிறித்துவத்தைப் பரப்பும் பத்திரிகையையோ அச்சடிக்க முடியவில்லை.