பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

இந்தியாவில் - இதழியல் கலை! தோற்றம்! வளர்ச்சி!தொண்டு!



இதனை அறிந்த வாரன்ஹேஸ்டிங்ஸ், யார் அந்தக் கருத்தை வெளியிட்டவர்? எந்த அச்சகத்தில் அது அச்சடிக்கப்பட்டது? அதன் உரிமையாளர் யார்? முகவரி என்ன என்பதைக் கண்டுபிடிக்கப் பெரும்பாடுபட்டும், காவலர்களால் அந்த விவரத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அடங்கா சினம் கொண்ட ஹேஸ்டிங்ஸ் இதழ்களுக்கான ஒழுங்கு வகைகளை, ஒழுக்க முறைகளைப் புதிதாகக் கொண்டு வந்தார்.

அதற்குள் ஹேஸ்டிங்ஸ், 1799-ஆம் ஆண்டில் பதவியை விட்டு விலகி விடவே, புதிதாக 13.5.1799ல் பதவியேற்ற லார்டு வெல்லெஸ்ஸி, ஹேஸ்டிங்ஸ் ஒழுங்கு முறைச் சட்டத்தை மீண்டும் வெளியிட்டார். அந்தச் சட்டம் இது :-

1. ஒவ்வொரு பத்திரிகையிலும் யார், அதை அச்சிடுகிறார்கள்? ஆசிரியர் யார்? சொந்தக்காரர் யார்? முகவரி என்ன? என்ற விவரத்தை வெளியிட வேண்டும்.

2. பத்திரிகை ஆசிரியர், அதன் சொந்தக்காரர் இருவரும் தலைமைச் செயலாளரிடம் அவரவருடைய முகவரிகளைக் கூற வேண்டும்.

3. என்ன செய்திகளைப் பத்திரிகையில் வெளியிட ஆசிரியரும், உரிமையாளரும் வெளியிட விரும்புகின்றனரோ, அவற்றை எல்லாம் அரசு தலைமைச் செயலரிடம் காண்பித்து, அவருடைய முன் ஒப்புதலைப் பெற்ற பின்பே அச்சிட வேண்டும்.

4. பத்திரிகைகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் வெளியிடக் கூடாது.

5. ஒரு பத்திரிகையின் கட்டுப்பாட்டாளர்; அந்த ஏட்டின் ஆசிரியரோ, அச்சகத்தாரோ, உரிமையாளரோ அல்லர்; அரசின் செயலாளர்தான் அதன் கட்டுப்பாட்டாளர் ஆவார்.

6. மேற்கண்ட விதிகளை மீறுபவர்களுக்கு வழக்கு மன்றமோ, அபராதம் விதிப்பதோ ஏதும் கிடையாது. உடனே அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள்.