பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

95


என்பவை தான் லார்டு வெல்லெஸ்ஸி வெளியிட்ட பத்திரிகைச் சட்டம். நாடு கடத்தப்படுவார்கள் என்றால், இந்திய மண்ணிலே பிறந்தவன் இங்கிலாந்து மண்ணிலா நடமாடுவான்? அன்று அன்று! சட்டத்தை அன்று மீறுபவர்களிலே பெரும்பான்மையர் இங்கிலாந்துக்காரர்களே ஆவர்! அதனால் அவர்களை மிரட்டி அச்சுறுத்திடவே இந்த நாடு கடத்தல் தண்டனை ஆகும்.

கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி நிர்வாகத்தின் கீழ், பத்திரிகைகள் ஏறக்குறைய பதினேழு ஆண்டுகளாகத் திணறித் தவித்துக் கொண்டிருந்தன. வெல்லெஸ்ஸியின் பத்திரிகைச் சட்டத்தால் பத்திரிகை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டார்கள். தலைமறைவு வாழ்க்கை நடத்தினார்கள். என்ன காரணம் இதற்கு?

சில ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், அச்சகத்தார்கள் சில இதழ்களில் அவரவர்கள் பெயர்களை அச்சடிக்காமலேயே வெளியிட்டும், விற்பனை செய்து கொண்டும் இருந்த நிலை அரசுக்கு எட்டிற்று.

குறிப்பாக, அரசியல் விவகாரங்கள் பத்திரிகைகளில் வெளியிட்டது போக; இப்போது மதக் குழப்பத்தை மக்கள் இடையே பரப்பும் வகையில், கிறித்துவ மதக் குருக்கள், இந்து சமயத்தையும், முகமதிய மதத்தையும் அவரவர் பத்திரிகைகளிலே தாக்கி எழுதும் நோக்கத்தில் எழுதி, அந்தந்த மதத்திலே குழப்பங்களை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்.

அந்தப் பத்திரிகைக் குழப்பவாதிகளைக் கண்ட தலைமை ஆளுநரான லார்டு மிண்டோ (Lord Minto) அவற்றை அச்சடிக்கும் அச்சகங்களை உடனே கல்கத்தா நகருக்கு மாற்றுமாறு உத்தரவிட்டார்.

ஏறக்குறைய 13 ஆண்டுகளுக்குப் பிறகு, 1813-ஆம் ஆண்டில் மீண்டும் வாரன்ஹேஸ்டிங்ஸ் தலைமை ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டார் - கம்பெனி ஆட்சிக்கு. இவர் வெல்லெஸ்லி போட்ட பத்திரிகைச் சட்டத்தின் கெடுபிடியைச் சிறிது தளர்த்தியதால், மறுபடியும் இதழியல் துறையில் கணிசமான வளர்ச்சியும், கண்ணியமான கருத்துக்களும் இடம் பெற்று வலம் வந்தன.