134
இதழ்கள்
7. இதழ்கள் 'யானைத் தலையளவு பெரியபூச்செண்டுடன் இன்று மிஸ் ஹெர்மாயின் மேரிகோல்டு பார்க்க வந்தாள். வருவாள் என்று எனக்குத் தெரியும். இன்று தவற மாட்டாள். “குட் மார்னிங். மிஸ்டர் ராம்! (என் முழுப் பெயரை உச்சரிக்க அவளுக்கு என்றும் நாக்குப் புரள்வதில்லை) நீங்கள் சிரஞ்சீவி யாக இருக்க வேண்டும். இந் நன்னாள் திரும்பத்திரும்ப வர வேண்டும்.” 'ஒ தாங்க்யூ. தாங்க்யூ. எவ்வளவு நேர்த்தியான செண்டு!” மிஸ் ஹெர்மாயினின் கன்னங்கள் சிவப்புப்பூத்தன. அவள் புன்னகையில் மூக்குத் தண்டு சுருங்கிற்று. பழுத்த நெற் கதிர் களின் நிறத்தில் கேசம் சுருளாது பட்டையாய் வாள் வீச்சுப் போல் வேகமாய் நெற்றியிலிருந்து கிளம்பிப் பின்னுக்குப் பிடரியிலிருந்து முதுகில் தோள்பட்டை வரை வளைந்து திடீரெனக் கத்திரிப்பில் முடிந்தது. ஒடிய ஒடியச் சுறுசுறுப் பாய் அவள் வரும் நடையில் அவள் முகமே, நீண்ட காம்பின் மேல் காற்றில் அசைந்தாடும் பூப்போல்தான் இருந்தது. ஐந்து வருடங்களாய் இப்படித்தான் வருகிறாள். நித்ய யெளவனியாய் ஒருவித மாறுதலுமின்றி இப்படியேதான் இருக்கிறாள். ஒவ்வொரு தடவையும் இதே பல்லவிதான்.
- மிஸ்டர் ராம்! இப்போது எப்படி யிருக்கிறீர்கள்? ஒன்றுமில்லையே! நல்லது, நல்லது. ஒய்வு, ஒய்வு, நிறைய ஒய்வு. ஒய்வுதான் மருந்து. ஜலதோஷம் கண்டால் அசட்டையாயிருந்து விடாதீர்கள். உடனே கவனிக்கணும். சரி, சரி, நான் போகனும், ஒ சிரமப்படாதீர்கள். எழுந்திருக்க வேண்டாம், நான் வருகிறேன்!”
ஐந்து வருடங்களின் ஐந்து முறைகளிலும் இதே திடும் பிரவேசம், இதே பஞ்சாதி, இதே மூச்சில் இதே அவசரமான மறைவுதான்.