பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்


இதை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு நம் நாட்டுச் சிற்பிகள் எந்த எந்த உருவங்களைச் செதுக்கியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம். அவர்கள் தேர்ந்தெடுத்த சிற்ப வடிவங்களுக்கு விஷயங்களை எங்கிருந்தெல்லாம் பெற்றிருக்கிறார்கள் என்றும் தெரிந்துகொள்ளலாம்.

சப்தத்தின் பாஷை சங்கீதம் என்பது போல வடிவத்தின் பாஷை சிற்பம். நாகரிகமும் பண்பாடும் மனிதனிடம் தோன்ற ஆரம்பித்த நாளிலிருந்தே அவன் எண்ணங்களில் தோன்றும் பொருட்களுக்கு அவன் வடிவம் அமைக்க முனைந்திருக்கிறான். முதல் முதலில் மண்ணைக்கொண்டே வடிவங்களை உருவாக்கியிருக்கிறான். வீடுகளில் தினசரி உபயோகப்படும் சாதாரணப் பண்டங்களிலிருந்து வாக்கிற்கும் மனத்திற்கும் எட்டாத அந்தப் பரம்பொருள் அவனது கைகளில் உருவாகியிருக்கின்றது. வீரர்களுக்கு நிலையங்கள், தெய்வங்களுக்குக் கோயில்கள், வாழ்வதற்கு வீடுகள், வெற்றிக்குச் சின்னங்கள் எல்லாம் கல்லாலும் மண்ணாலும் பொன்னாலும் சிற்பிகளால் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன. எல்லா இடங்களிலும் சிற்ப வடிவங்களும் அவைகளுக்கெல்லாம் தக்க விஷயங்களும் சிற்பிகளின் சிந்தனைகளில் உதயமாகியிருக்கின்றன.

நமது பண்பாட்டிற்குப் பக்க பலமாக இருப்பவை நமது சமய உண்மைகள். கலை, இலக்கியம், தத்துவம் என்பவை மட்டுமல்ல. நமது சமூக அரசியல் பொருளாதாரம் முதலியவைகள் கூட சமய அடிப்படையின் மீதுதான் வளர்ந்து வந்திருக்கின்றன. அதனால் இந்தியச் சிற்பத்தின் அடிப்படையும் சமயச் சார்பு உடையதாகவேதான் இருந்திருக்கிறது. சம

102