பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்


அற்புதமானவை. புத்த பகவான் அருள் ஞானம் பெற்ற போதிமரத்தைச் சுற்றி அமைத்த அந்த சரித்திரப் பிரசித்தி பெற்ற சாஞ்சி (Sanchi) ஸ்தூபாவின் வாயில்களில்தான் எவ்வளவு அழகான சிற்பக் கிராதிகள், தோரணங்கள், வடிவங்கள்! லாவகமாகக் கிராதிகளை ஏந்தி நிற்கும் பெண்களும் உருவாகிவிடுகிறார்கள் அந்த ஸ்தூபாவின் வாயில்களிலே.

இப்படி புத்த பகவானுக்கு ஸ்தூபாக்களும், விகாரங்களும் தோன்ற ஆரம்பித்த பின் அங்கு புத்த பிரானையே கடவுளாகப் பிரதிஷ்டை செய்ய முனைந்திருக்கிறார்கள். மனிதன் கடைத்தேற முத்தியடைய சிறந்த வழிகாட்டியாயிருந்த அந்த மகாபுருஷனது வடிவத்தை உருவாக்க சிற்பி தன்னையே ஒரு சித்த புருஷனாக ஆக்கிக்கொள்ள வேண்டியதிருக்கிறது, அவன் வடித்த உருவத்தில் தசைக்கும், மாமிசத்திற்கும் முக்கியத்துவம் இருக்கவில்லை. லக்ஷியத்தையே அல்லவா உருவாக்குகிறான் அவன் அந்த சிலை உருவத்திலே. இதைத் தெரிந்துதானே, ‘சமய சாதனையால் இறைவனது தியாகத்தில் ஊறின ஒருவனே இறைவனது திருவுருவைக் காண முடியும், அப்படிப் பட்டவனாலேயே அவன் உள்ளத்தில் கண்ட, உருவின்றி நின்ற உருவை கருவின்றி நின்ற உருவை உருவாக்கவும் முடியும்’ என்று சுக்கிரநீதி சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஏதோ அழகு நிறைந்த ஒரு உருவத்தை உருவாக்குவது அவர்கள் நோக்கமல்ல. தெய்வீக உருவைக் கற்பனை பண்ணுவதும், அப்படிக் கற்பனை பண்ண நீண்ட நாட்கள் இறைவன் தியானத்திலே தவம் கிடப்பதும்தான் சிற்பிகளின் காரியமாக இருந்திருக்கிறது. இப்படி சிற்பிகள் சிந்தனை செய்து சிந்தனை செய்து, தியானித்துத்

104