பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைச் செல்வம்

ததோர் காதல் கனிவுடன் வருகிறார்கள். ஒருவரோடு ஒருவர் பின்னிக்கொண்டு வருகிறார்கள். இப்படி உருவாகியிருக்கிறது சிலை, அப்பர் பாட்டிற்கு விளக்கம் கொடுப்பதுபோல. இந்த சிற்பம் உருவான கதை தெரியுமா? உருவாக்கிய சிற்பியே சொன்னான்: எல்லாம் மானசீக உலகில்தான்.

“முதலில் நான் சிவன் பார்வதி இருவரையும் சேர்த்து உருவாக்க எண்ணவில்லை. சந்திரசேகரனை மட்டும்தான் உருவாக்க எண்ணினேன். கல்லில் உருவை வரைந்து வலப்பக்கத்தைச் செதுக்கி வேண்டாத பாகத்தையெல்லாம் வெட்டி எடுக்கும்போதுதான், இடப்பக்கத்திலும் வெட்டிச் செதுக்கி எடுக்கவேண்டிய பாகம் அதிகம் என்று கண்டேன். அப்போது உதயமாயிற்று ஒரு கற்பனை. ஏன் இந்த இடப்பக்கத்தில் இருக்கும் சிறு இடத்தில் ஒரு உமையைச் செதுக்கிச் சேர்த்துவிடக் கூடாது என்று. பின்னர் என் சிற்றுளி வேலை செய்தது. இருக்கும் இடத்தினுள்ளேயே அந்தப் பார்வதியும் சமாளித்துக்கொள்கிறாள். ஆம், இட நெருக்கடி காரணமாக சிவபிரானைத் தழுவி நிற்கும் ஒரு கொடியாகவே உமை அமைந்துவிடுகிறாள்” என்று சொன்னான் சிற்பி! நான் சொன்னேன் சிற்பியிடம், “ஆம்; இந்தக் கொடியையும், இந்தக் கொடியை அணைத்துக்கொள்ளும் கொம்பையும் கண்டால்,

மஞ்சிடை வயங்கித் தோன்றும்
பவளத்தின் வல்லி அன்ன
குஞ்சரம் அனைய வீரன்
குலவுத் தோள் தழுவிக் கொண்டாள்

115