பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

 தமிழ் நாட்டில் நீண்டு நிமிர்ந்த பெருங்கோயிலாக இன்றும் நின்று நிலவுகிறது. அவன் மகன் ராஜேந்திரன், கங்கையையும் கடாரத்தையும் வென்று புலிக்கொடி நாட்டியதோடு அமையாது கங்கை கொண்ட சோழீச்சுவரம் என்ற கோயிலை உருவாக்கியிருக்கிறான். எண்ணரிய எழிலாலும் அளவாலும் தந்தை கட்டிய கோயிலை விடப் பெரிய கோயிலை கட்ட முனைந்திருக்கிறான் இந்தத் தனயன். இவன்தன் மகன் ராஜராஜன் கட்டிய கோயில்தான் தாராசுரத்து ஐராவதேஸ்வரர் கோயில். இன்றும் இதுபோன்று எத்தனை எத்தனையோ கோயில்கள் சோழநாடு முழுவதும் நிறைந்து அந்தக் கலை வளர்த்த காவலர்களின் பக்திக்கும், கலை அறிவுக்கும் சான்று பகர்கின்றன.

இந்தக் கோயில்களில்தான் எத்தனை எத்தனை மூர்த்திகள் - கல்லிலும், செம்பிலும் நர்த்தன விநாயகரும், நடனராஜரும், அர்த்தநாரியும், பிக்ஷாடனரும், கஜம்சம்ஹாரரும், திரிபுராந்தகரும், வீணாதரரும், கங்காதரரும், விஷ்ணுவும், துர்க்கையும் இன்னும் எண்ணற்ற மூர்த்திகளும் அன்று இந்தக் கோயில்களில் நிறைந்திருந்தார்கள். காலகதியில் இவைகளில் பல கவனிப்பாரற்று தத்தம் நிலை இழந்திருக்கின்றன. அயலாருடைய ஆவேச மதவெறிக்கு உட்பட்டு மூக்கிழந்தனவும், முடி இழந்தனவும் சில. என்றாலும் இந்தச் சிலை உருவங்களின் அருமையை உணர்ந்த அன்பர் சிலர், அன்றே இவைகளை இந்தக் கலை உணர்வில்லாத மாக்கள் கையில் அகப்படாதவாறு காப்பாற்ற முனைந்திருக்கிறார்கள். இப்படித்தான் பல அற்புதமான செப்பு விக்ரகங்கள் கோயில்களில் உள்ள நிலவறைகளிலும், கோயிலுக்கு வெளியே

120