பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்


திருவாலங்காட்டிலும், பட்டுக்கோட்டையிலும், கந்தர்வக் கோட்டையை அடுத்த காயாவூரிலும், சீர்காழியை அடுத்த திருவெண்காட்டிலும் அற்புதமான சிலைகள் மண்ணுக்குளிருந்து வெளிவந்திருக்கின்றன. புயலால் அடிபட்டு விழுந்த மரத்தை வெட்டி எடுத்தபோது வெளிப்பட்டவை சில. வயலை வெட்டி நிலத்தைத் திருத்தியபோது வெளிவந்தவை சில. இடிந்து விழுந்த நிலவறைகளைச் செப்பம் செய்தபோது கண்டுபிடிக்கப்பட்டவை பல. இவைகளில் எல்லாம் சிறந்தவை திருவெண்காட்டிலிருந்து கிடைத்துள்ள எட்டு விக்ரகங்கள்தான். அவைகளின் கலை அழகில் ஒரு கோடி காட்டுவதே இன்று என்னுடைய முயற்சி.

1952ஆம் வருஷம் ஜூலை மாதத்தில் ஒருநாள் கிராமக் காவலர்கள் இருவர் காலை வேளையில் திருவெண்காட்டைச் சேர்ந்த சன்னதித் தோட்டத்தின் வயல் வெளிகளில் சுற்றிக் கொண்டிருந்தனர். அப்போது விநாயகரின் வாகனமான மூஷிகம் ஒன்று ஒரு பொந்தில் நுழைந்தது. மூஷிகத்தைப் பிடிக்கும் ஆத்திரத்தில் அது நுழைந்த பொந்தையே வெட்டினர் கையிலிருந்த மண்வெட்டியால். காவல்காரர் வெட்ட வெட்ட கணீர் கணீர் என்ற ஓசை கேட்க ஆரம்பித்தது. தொடர்ந்து வெட்டியபோது ஒரு சிறு அம்பிகையின் இடது கை, இன்னும் தொடர்ந்து பாருங்கள் என்று சொல்லும் தோரணையில் லாவகமாக நீட்டப்பட்டிருந்தது. காவல்காரர்கள் அம்பிகை காட்டிய வழியே தொடர்ந்து வெட்டினார்கள். வெட்ட வெட்ட பெரிய பெரிய விக்ரகங்கள் வெளிவர ஆரம்பித்தன. விஷயம் பரவிற்று ஊர் முழுவதும். கிராம அதிகாரிகள் வந்த

122