பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைச் செல்வம்

படுத்தி வளர்த்தால், உலக மக்களுடன் ஒரு ஒத்த கலையறிவு உண்டாகும். அதன் மூலம் அவர்களிடம் நல்லுறவு வளரும். இதைச் சாத்தியமாக்கத்தான் கலை நிபுணர்கள் பரிவர்த்தனை வேண்டும். நல்லெண்ணத் தூது கோஷ்டிகளின் சேவையைவிட இந்தப் பரிவர்த்தனை எவ்வளவோ சிறந்ததாகவும் இருக்கும்.

சமயத் துறையில் விவேகானந்தரும், அரசியல் துறையில் மகாத்மா காந்தி அடிகளும் உலக மக்களிடையே நல்லுறவைப் பரப்பிய பெரியோர்கள். ஆனால், கலைத் துறையிலோ ரவீந்திரநாத் தாகூர்தான் இந்தப் பணியைச் சிறப்பாகச் செய்தவர். செய்து முடித்தவர். வங்காளத்திலே பிறந்து கலைக்கூடமான சாந்திநிகேதனத்தை உருவாக்கி கவிதைக்கு நோபல் பரிசு பெற்று, தள்ளாத வயதிலும் இங்கிலாந்து - அமெரிக்காவோடு நின்று விடாமல் ஜப்பான் முதலிய உலகத்தின் பல பாகங்களுக்கும் சென்று கவிதையின் மேன்மையை, கலையின் உயர்வைப் பற்றி எல்லாம் விரிவாக எடுத்துச் சொல்லி கலையுறவை வளர்த்திருக்கிறார். இவருடைய வங்கக் கவிதையின் ஆங்கில மொழி பெயர்ப்பைப் படித்துப் பார்த்து விட்டே டபிள்யூ பி. ஈட்ஸ் என்ற மேல் நாட்டுக் கவிஞன், “இவர்தான் கீழை நாட்டு கலாச்சாரத்தின் ஏக பிரதிநிதி, ராஜதூதன்” என்று பாராட்டுகிறார். தாகூரின் சாந்தி நிகேதனம், ஆண்டுரூஸ் முதலிய அறிஞர்களை மேல் நாட்டிலிருந்து இங்கு இழுத்திருக்கிறது. அபனிந்திரநாத் தாகூர், நந்தலால் போஸ் போன்ற கலைஞர்களை உருவாக்கி, அவர்கள். ஆக்கித் தந்த கலைச் செல்வங்களைக் கப்பலேற்றி மேல் நாட்டுக்கு அனுப்பியிருக்கிறது.

133