பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

தாகூரைப் போலவே கவிக்குயில் சரோஜினி தேவியும், தோருதத்தும் தங்கள் தங்கள் கவிதை மூலமாகக் கீழ்நாட்டிலும் மேல் நாட்டிலும் கலை உறவை வளர்த்திருக்கிறார்கள்.

பல வருஷங்களுக்கு முன் இந்தியாவிற்கு கவர்னர் ஜெனரலாய் வந்திருந்த லார்ட் கர்ஸான் இந்தியக் கலைகளைப் பற்றி ஒரு நாள் கலை வளர்க்கும் ராயல் சொசைடியார் முன்பு பேசியிருக்கிறார். அப்போது அவர் இந்திய நாட்டில் காணும் சில உருவங்கள் எல்லாம் விகாரமானவை, விந்தையானவை, விபரீதமானவை (Bizarre, Grotesque and Clumsy) என்று குறிப்பிட்டிருக்கிறார். இதே எண்ணம்தான் ஆங்கிலேயர் பலரது மனதில் அன்று இருந்திருக்கிறது. இந்தியக் கலை வளர்ச்சிக் கழகத்தில் அக்கறை அதிகம் காட்டிய லார்ட் ரோனால்ட் ஷேயும் இதைப் பற்றியே குறிப்பிடுகிறார், “இந்தியச் சிற்பம், சித்திரம் எல்லாம் வெள்ளைக்காரருக்கு விகாரமுடையதாகவேபடுகின்றன. இந்தியக் கலையில் எவ்வளவோ ஆர்வம் காட்டும் ஒரு மேலைநாட்டானும் எலிபென்டாவில் உள்ள மூன்று முகம் கொண்ட திருமூர்த்தி சிலையின் முன் வந்ததும் மலைத்துவிடுகிறான் - இயற்கைக்குப் பொருத்தமாக சிலை அமையவில்லையே" என்று, இப்படித்தான் அங்கலாய்க்கிறார் அந்த ரோனால்ட் ஷேயும்.

ஆனால், இந்தியக் கலையின் அருமை பெருமை களை, அபூர்வத் தத்துவங்களையெல்லாம் இன்று மேல் நாட்டார் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். ஆனந்த நடராஜ மூர்த்தியின் அற்புத சிலை உருவத்

134