பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைச் செல்வம்

தைக் கண்டு அப்படியே அதிசயித்து நிற்கிறார்கள். எத்தனை பவுன் விலையென்றாலும் அத்தனை விலையையும் கொடுத்து அந்தச் சிலையை வாங்கி தங்கள் தங்கள் கலைக் கூடங்களில் வைக்கிறார்கள். கொண்டாடுகிறார்கள்: கங்காதரனையும், பிக்ஷாடனரையும், அர்த்த நாரியையும் கண்டு என்ன அபூர்வமான கற்பனை என்று மூக்கின் மேல் விரலை வைக்கிறார்கள் உள்ளத்திலே கோயில் ஒன்று கட்டி அங்கு இறைவனையே பிரதிஷ்டை செய்த பூசலார் நாயனார் கதையைக் கேட்டு, இது ‘மனித சிந்தனையின் சிகரம்’ என்கிறார்கள். சாஸ்திரம், சமயக்கலை எல்லாம் ஒன்றாகச் சேர்ந்தல்லவா இந்த நாட்டில் கூத்தாடுகிறது என்று பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள். லண்டனில் இந்தியக் கலைப்பொருள் கண்காட்சி நடக்கிறது. பாஸ்டனில் நடக்திறது.

இதெல்லாம் எப்படிச் சாத்தியம் ஆயிற்று ஒரு சில வருஷங்களுக்குள்ளே என்றால் அதிலேதான் இருக்கிறது ரகசியம். கலை நிபுணர்களின் பரிவர்த்தனைதான் இந்த அற்புதத்தைச் சாதித்திருக்கிறது. பெர்கூஸன், ஹாவல், கெராட், பெர்சிபிரௌன், கிளாட்ஸ்டன், சாலமன் முதலிய கலை நிபுணர்கள் கப்பலேறி இந்தியாவிற்கு வந்திருக்கிறார்கள். பம்பாயிலும், கல்கத்தாவிலும் உள்ள கலை வளர் கழகங்களின் தலைமைப் பதவிகளை ஏற்றிருக்கிறார்கள். இந்தியக் கலையின் அடிப்படையை விளக்கமாகக் கற்றிருக்கிறார்கள். அதை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

இதே சமயத்தில் நாமும் சும்மா இருக்கவில்லை. நம்மில் ஒருவரான ஆனந்தக் குமாரசாமியைக் கப்ப

135