பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைச் செல்வம்

விட்டன. அனிபெசண்டும், அருண்டேலும் நமக்களித்த பிரம்மஞானத்திற்கு எல்லாம் ஈடாக, ருக்மணி தேவியையும் அவர் தம் நாட்டியக் கலையையும் மேல்நாட்டாருக்கு உதவியிருக்கிறோம். உதயசங்கரையும், அவரது மனைவி அமலா நந்தியையும் இந்திய நடன உலகின் பிரதிநிதிகளாக் எல்லா நாட்டிலுமே சென்று வர விடுத்திருக்கிறோம்.

இவ்வளவுதானா? பூலோக் சுவர்க்கம் என்றும் ஹாலிவுட்டில் இருந்து வரும் கிரேட்டா கார்போ, டோரதிலாமூர், மெர்லி ஆபிரான் முதலியவர்கள் நடித்த படங்களை எல்லாம் கண்டு களித்த நாம் நமது யானைப்பாகன் மகன் ஸாபுவையும் அந்த ஹாலிவுட்டிற்கே அனுப்பியிருக்கிறோம். அவன் நடித்த யானைச் சிறுவன், முரசு என்னும் படங்களோ உலக முழுவதுமே சக்கைப் போடு போட்டிருக்கின்றன. சினிமாக் கலை இப்படி நக்ஷத்திர பரிவர்த்தனை மூலம் சிறப்பாக வளர்ந்து வருகிறது.

புதிதாகச் சுதந்திரம் பெற்ற நாடு நம் நாடு. நம் நாட்டின் ராஜப் பிரதிநிதிகளாக பலரை இன்று வெளி நாட்டிற்கு அனுப்பி வைக்கிறோம். இவர்கள் எல்லோரும் கலை நிபுணர்கள் அல்ல. கலை நிபுணர்களையே தேர்ந்தெடுத்து நம் நாட்டின் ராஜப் பிரதிநிதிகளாக பிற நாடுகளுக்கு அனுப்பிவிட்டு அங்கிருந்து அதே விதமாக கலை நிபுணர்களையே அந்த அந்த நாட்டுப் பிரதிநிதிகளாகப் பெறுவோமானால் நாடுகளுக்குள் கலையறிவு வளரும். அதனால் நல்லுறவு பெருகும். போர் ஒடுங்கும். புகழ் ஓங்கும்.

139