பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

தாயார் சந்நிதி இருந்ததில்லை. இன்னும் ஒப்பிலியப்பன் கோயில், நாச்சியார் கோயில் முதலிய இடங்களில் தனித்த தாயார் சந்நிதி இல்லை என்பது பிரசித்தம். கருவறைக்குள்ளேயே இருந்த தாயாரைப் பிரித்து, அவளைத் தனிக் கோயிலில் இருத்தியதெல்லாம் பத்தாம் நூற்றாண்டிற்குப் பின்புதான். ஆழ்வார்களும், ஆச்சாரியார்களும் மற்றும் ராமன், கண்ணன், விஸ்வக்சேனர் எல்லாம் தனிக் கோயில்களில் அமர்ந்தது இன்னும் பிந்திய காலத்திலேயே, இங்கு கூட ஒரு பாரபட்சம். பெருமாள் கோயில்களில் ஆண்டாளுக்கு என்று ஒரு தனி சந்நிதி. பன்னிரு ஆழ்வார்களில் ஒருத்தியான ஆண்டாளுக்கு மட்டும் தனிச் சந்நிதி ஏற்படுவானேன்? விஜயநகர மன்னனான கிருஷ்ண தேவராயன் ஆண்டாளிடம் அத்யந்த பக்தி கொண்டவன். அவனது கைங்கர்யமே இந்த ஆண்டாளுக்கு தனித்த சந்நிதி. இவ்வளவுதானா சொல்லலாம் இக்கோயில்களின் அமைப்பைப் பற்றி? இன்னும் எவ்வளவோ சொல்லலாம். சொல்லிடில் எல்லை இல்லை என்றே சொல்லலாம்.

சமுதாய வாழ்வினை வளர்க்க இக்கோயில்கள் எப்படி உதவியிருக்கின்றன என்று தெரிந்து கொள்ளாவிட்டால் இந்தப் பேச்சு பூரணம் அடைந்ததாகாது. நகர நிர்மாணத்திலேயே கோயில்கள் முக்யஸ்தானம் வகித்திருக்கின்றன. எந்த ஊரிலும் ஊருக்கு நடுவில் தான் கோயில், அதைச் சுற்றித்தான் தெருக்கள், கடை வீதிகள், வீடுகள் எல்லாம். மதுரையைப் பாருங்களேன். நகர நிர்மாணத்திற்கே சிறந்த எடுத்துக்காட்டு என்றல்லவா மேல்நாட்டு அறிஞர்கள் பாராட்டுகிறார்கள். கோயிலின் நான்கு திசைகளிலும் நான்கு வாயில்

150