பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைச் செல்வம்

கள். வாயில் ஒவ்வொன்றிலும் உயர்ந்த கோபுரங்களை எழுப்பி நாட்டையும் நகரத்தையும் காத்து நிற்கும் காவல் கூடமாக அல்லவா கோயிலை உருவாக்கி இருக்கிறார்கள், தமிழர்கள்.

கோயில்களைச் சுற்றிய வீதிகளில் வியாபாரங்கள் வலுத்திருக்கின்றன. வியாபாரம் பெருகப் பெருக நாட்டின் வளம் பெருகியிருக்கிறது. பல நாடுகளில் இருந்து வியாபாரிகள் தங்கள் பண்டங்களைக் கொண்டு வந்து கொடுத்து தங்கள் நாட்டில் கிடைக்காத பண்டங்களை இங்கிருந்து வாங்கிப் போயிருக்கிறார்கள். இப்படி வருகின்றவர்களது வசதிகளைத் தெரிந்தே கோயிலை ஒட்டிச் சந்தைகள் உத்ஸவங்கள், திருவிழாக்கள் எல்லாம் வளர்ந்திருக்கின்றன. பொருளாதாரக் கண் கொண்டு பார்த்தால் ஒவ்வொரு விழாவுமே ஒரு பெரிய சந்தைதான். கூட்டுறவு சம்மேளனம்தான்.

பல பக்கங்களிலிருந்தும் மக்கள் இப்படி வந்து கூடக் கூட நாட்டின் வளம், நகரத்தின் வளம் பெருகியிருக்கிறது. வந்தவர்களுக்கு உணவு அளிக்க அன்ன சத்திரங்கள் தோன்றியிருக்கின்றன. கோயிலை ஒட்டிக் குளங்கள், குளங்களை ஒட்டி நந்தவனங்கள் உருவாகி இருக்கின்றன, இவைகளை நிர்மாணித்தவர்கள் அவரவர்கள் காலத்திற்குப் பின்னும் இவைகள் சரியாக நடக்க நிலங்களை மான்யமாக வழங்கியிருக்கிறார்கள். ‘நிபந்தங்கள்’ ஏற்படுத்தியிருக்கிறார்கள். அவைகளைக் கோயிற் சுவரில் கல்வெட்டாக எழுதி வைத்திருக்கிறார்ர்கள். இப்படித்தான் தேவதானங்கள், தேவபோகங்கள் எல்லாம் எழுந்திருக்கின்றன.

151