பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

கைக் கட்டிட நிர்மாணத்தை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு செஞ்சிக் கோட்டையில் உள்ள அரண்மனைகள், மாளிகைகள், கல்யாண மகால்களைப் பார்க்கலாம். கன்யாகுமரி மாவட்டத்திலே உள்ள பழைய பத்மநாபபுரம் அரண்மனையையும் அதையடுத்த மாளிகைகளையும் பார்த்துத் தெரிய வேண்டியவைகளைத் தெரிந்து கொள்ளலாம். மைசூரில், திருவனந்தபுரத்தில், புதுக்கோட்டையில் கட்டியிருக்கும் அரண்மனைகள் எல்லாம் பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டின் கட்டிடக் கலைச் சிறப்பைக் காட்டுவன. பழைய கட்டிடக் கலை நிாமாணத்திற்கு எடுத்துக் காட்டாக இலங்குபவை அல்ல.

இவைகளைத் தவிர, இன்று நம் கண் முன் நிற்கும் ஒரு சில மாளிகைகள், நாயக்க மன்னர்கள் கட்டிய மாளிகைகள். இவைகளைப் பற்றிக் கூறாவிட்டால் இந்தப் பேச்சு பூரணத்வம் பெற்றதாகாது. சேர சோழ பாண்டியர்கள், பல்லவ மன்னர்கள் எல்லாம் கோயில்களைத் தேவப் பிரசாதமாகக் கட்டி முடித்தார்களே ஒழிய, தங்களுக்கும் தங்கள் சந்ததிக்கும் தனி மாளிகை, கட்டிக் கொள்ளவில்லை என்பதையும் அறிகிறோம். ஆனால், பதினாறு பதினேழாம் நூற்றாண்டுகளில் தமிழகத்தை ஆண்ட நாயக்க மன்னர்கள் கோயில்களைக் கட்டியதோடு, கோயிலுக்கு கோபுரம், நூற்றுக்கால் மண்டபம், ஆயிரக்கால் மண்டபம் எல்லாம் அமைத்ததோடு, தங்களுக்கு மாளிகைகளும் கட்டத் தவறவில்லை. இவர்கள் கட்டிய அரண்மனைகளும், மாளிகைகளும் இன்றைய மைசூர், பரோடா, ஜெய்ப்பூர், உதயப்பூர் முதலிய மன்னர்கள் கட்டியிருப்பவைகளைப் போல பெரிய மாளிகை அல்லதான்.

164