பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

மிகச்சிறந்த முறையில் தமிழ்நாட்டில் சித்திரக் கலை வளரவில்லை என்று குறை சொல்பவரும் கூட சிற்பக் கலையைப் பற்றிப் பேசும்போது தமிழன் வளர்த்த சிற்பக் கலையின் உன்னதத்தை வேறு எந்த நாடுமே எட்டிப் பிடிக்கவில்லை என்பதை ஒப்புக் கொள்ளுவர். சிற்ப உலகிலேயே சிறந்த புகழ்பெற்றவர்கள் கிரேக்கர்கள். அவர்கள் உருவாக்கிய சிற்பங்கள் அளவில் பெரியவை. அங்க நிர்மாணத்தில் ஒரு சிறிதும் தவறாதவை. இன்னும் முறுக்கிய நிலைகளை, நெளிவு சுளிவுகளை எல்லாம் கவர்ச்சியாகக் காட்டுபவை என்றாலும், உள்ள உணர்ச்சிகளை உருவாக்கிக் காட்டுவதில் வெற்றி பெற்றவை அல்ல. ஆனால், தமிழகத்துச் சிற்பியோ வண்ணத்தைத் தீட்டுவதிலும் சுண்ணத்தைச் சேர்ப்பதிலும் மாத்திரம் தன் திறமையைக் காட்டியவன் அல்ல. அவைகளுக்கு எல்லாம் மேலான எண்ணத்தையே உருவாக்கிக் காட்டுவதில் கைதேர்ந்தவன். ‘இப்படியன், இந்நிறத்தன், இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதிக் காட்ட ஒண்ணாது’ என்று சமயக் குரவர்கள் எல்லாம் கையை விரித்த காலத்திலும் தம்தம் கற்பனையினால் உருவமில்லாத கடவுளுக்கு உருவத்தைக் கற்பித்து கல்லிலும் செம்பிலும் கண்ணுதலையே உருவாக்கி நிறுத்தியவர்கள் அவர்கள். ‘மண்ணினும் கல்லினும் மரத்தினும் சுவரினும் கண்ணிய தெய்வம் காட்டுநராக’ சிற்பிகள் அந்தச் சங்க காலத்திலேயே இருந்திருக்கிறார்கள் என்பதை மணிமேகலை கூறும். மலைகளைக் குடைந்து குடைவரைக் கோயில்களை உருவாக்கியவன் மகேந்திர பல்லவன் என்றால், மலைகளைக் குடைவதோடு மட்டும் விட்டுவிடாமல் மேல் பகுதி

174