பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைச் செல்வம்

எல்லோரையும் அழியாவர்ணத்தில் எழுதி வைத்திருக்கிறான் ஓவியன். இந்த சாமவ சரவணப் பொய்கைச் சித்திரம் இன்று மங்கி வருகிறது. இங்குள்ள ஓவியங்களில் சிறப்பானவை என்று கருதப்படுபவை அங்குள்ள தூண்களிலே தீட்டப்பெற்றவைதாம். ஒரு தூணை மகேந்திரவர்மனும் அவனது துணவியரும் அலங்கரித்தால், இன்னும் இரண்டு தூண்களை நடன மாதர் இருவர் ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். நடனப் பெண்களில் ஒருத்தி இடக்கையை அபய முத்திரையிலும் வைத்துக் கொண்டிருக்கிறாள். அவள் காதுகளிலே இலைக் குண்டலங்கள் தொங்குகின்றன. தலையை மலர்கள் அலங்கரிக்கின்றன. அவள் ஆடும் நிலை அந்த ஆடும் பெருமானையே நினைவூட்டுவதாக இருக்கிறது. இன்னொரு நடனக்காரி அர்த்தமத்தளி என்ற முத்திரையைக் காட்டும் கைகளோடு, ஒரே ஆனந்தக் களிப்பில் ஆடிக் கொண்டிருக்கிறாள். இச்சித்திரங்கள் தாம் தமிழ்நாட்டில் காலத்தால் முந்திய சித்திரங்கள், அஜந்தா சித்திரப் பாணியில் அமைந்திருப்பவை என்று பெருமையோடு பேசுவதற்கு உரியன.

இதனை அடுத்து, பல்லவர் காலத்திலேயே உருவானதுதான் காஞ்சி கைலாசநாதர் கோயில் ஓவியங்கள். மகேந்திர வர்மனது சித்தன்னவாசல் ஓவியங்கள் ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்றால், கைலாச நாதர் கோயில் ஓவியங்கள் ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தவை, ராஜசிம்ம பல்லவன் கட்டிய கோயிலின் கருவறையைச் சுற்றிய சுவர்களிலே சில சித்திரங்கள் தீட்டப் பெற்றிருக்கின்றன. அவைகள் எல்லாம் மங்கி மறைந்துவிட்டன.

181