பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைச் செல்வம்

யவர்கள். சோமாஸ் கந்தர் வரலாறு சித்திரமாக உருவாகியிருக்கிறது, இன்னும் ராஜ ராஜன், கருவூர்த் தேவர், நடராஜரது வடிவம், யோக தக்ஷிணாமூர்த்தி, நடமாடும் அப்ஸ்ரசுகள், விண்ணில் இசை மிழற்றும் வித்யாதரர்கள் கின்னரர்கள் எல்லாம் உயிர் ஓவியங்களாகத் திகழ்கின்றன. இவற்றையெல்லாம் தூக்கியடிக்கும் வகையில் திரிபுராந்தகரது போர்க் கோலமும் உருவாகியிருக்கிறது அங்கே ன்பூமியையே தேராகக் கொண்டு, பிரமனையே சாரதியாக அமைத்து, கணேசனையும். கார்த்திகேயனையும் துர்க்கையையும் சேனைத் தலைவர்களாக முன் நடத்தி, கம்பீரமாக தேரில் ஆரோகணித்து வரும் திரிபுராந்தகரது வடிவம் கண்கொள்ளாக் காட்சி. இச்சித்திரம் ஒன்றுதான் மேல்நாட்டு ஓவிய விமர்சகர்களும் கண்டு அதிசயித்து நிற்கும் அழகோடு விளங்குகிறது. ஓவிய உலகில் ஒரு ஒப்பற்ற சாதனை இக்காட்சி. ராஜராஜனுக்கு முந்திய சோழ மன்னர்களும் பிந்திய சோழ மன்னர்களும் ஓவியக் கலையில் அக்கறை காட்டியவர்களாகக் காணோம்.

பல்லவர்களும் சோழர்களும் தானா ஓவியக் கலைக்கு உயிர் கொடுத்தார்கள், பாண்டியர்களுக்கு இக்கலை வளர்ச்சியில் பங்கே இல்லையா? என்று தானே கேட்கிறீர்கள். பாண்டியர்களது ஓவியங்கள் சில திருநெல்வேலி மாவட்டத்தில் திருமலைப்புரத்தில் உள்ள கோயிலில் இருக்கின்றன. அவை எல்லாம் வேடர்களின் வடிவங்களும் தாமரை மலர்களுமே. சிறப்பாகச் சொல்வதற்கு என்று ஒன்றும் இல்லைதான்.

183