பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைச் செல்வம்

அகண்ட சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகரான தஞ்சையில் இப்படி ஒரு சிறிய கோயிலில் இறைவன் இருக்கலாமா? அது உன் புகழுக்கு ஏற்றதாகுமோ?” என்று பேசுகிறாள். “அப்படியேதான் நினைத்தேன் அக்கா நானும்" என்று கூறிவிட்டு "இந்தத் தளிக் குளத்து இறைவனையே ஒரு பிரஹதீஸ்வரனாக, பெரு உடையாராக அமைத்து அந்தப் பெரிய உருவிற்கு ஏற்ற வகையில் பெரிய கோயில் ஒன்றையும் கட்டிவிட வேண்டியதுதான்” என்று முடிக்கிறான்.

அன்றே கோயில் கட்டும் பணி துவங்குகிறது. 800 அடி நீளமும், 400 அடி அகலமும் உள்ள ஒரு பரந்த வெளியிலே, ஒரு வாயில், மகா மண்டபம், அர்த்த மண்டபம், நர்த்தன மண்டபம், தாபன மண்டபம் எல்லாம் அமைத்து நல்ல விசாலமான கருவறை ஒன்றையும் கட்டி அதன் பேரில் 216 அடி உயரத்தில் தக்ஷிண மேரு என்னும் விமானத்தையும் உயர்த்தி அந்த விமானத்தின் பேரில் எண்பது டன் நிறையுள்ள பிரமரந்திரத் தளக் கல்லையும் பரப்பி அதன் பேரில் பொன் போர்த்த ஸ்தூபியையும் நிறுவி, கோயில் கட்டி முடிக்கிறான் ராஜராஜன். அக்கோயிலிலே 54 அடி சுற்றளவுடைய ஆவுடையாரிலே 18 அடி உயரமுள்ள லிங்கத் திருவுருவையும் பிரதிஷ்டை செய்கிறான். அத்திருஉருவை பெருஉடையார் என்றே வணங்குகிறான். இப்படித்தான் ‘உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்’ என்னும் பொய்யா மொழியின் வாக்குக்கு இணங்க பெருவுடையாருக்கு ஏற்ற ஒரு பெரிய கோயில் கட்டி, ஒரு அகண்ட தமிழகத்தைத் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்ததைவிட, ஒரு உயர்ந்த தமிழகத்தையே உருவாக்கியவன் என்ற புகழுக்கு உரியவனாகிறான்.

187