பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

தஞ்சைப் பெரிய கோயில் தமிழ்நாடு முழுவதிலுமே சிறந்த ஒரு பெரிய கோயிலாக அன்று முதல் இன்று வரை நிலவி வந்திருக்கிறது. இப்படி ஒரு கோயில்தானா இந்தத் தஞ்சை மாவட்டத்தில்? விண் மறைக்கும் கோபுரங்களோடு கூடிய வினை மறைக்கும் கோயில்கள் நிறைந்த மாவட்டம் என்னும் புகழுக்கு உரியது இந்தத் தஞ்சை மாவட்டமே. இங்கு மூவர் முதலிகளால் பாடப் பெற்ற கோயில்கள் 160 உண்டு. அத்தோடு ஆழ்வார்களால் மங்களா சாஸனம் செய்யப் பெற்ற திவ்வியம் விளைந்த திருப்பதிகளும் 33 உண்டு. இன்னும் ஆறுபடை வீடுகளில் ஒன்றான ஏரகம் என்று கருதப்படும் கோயிலும் இந்த மாவட்டத்தில் தானே? சரயு நதிக்கரையில் பிறந்து கங்கைக் கரையில் தவழ்ந்த இராமன் வந்து நிரந்தர வாசம் செய்யும் காவிரிக் கரையில் உள்ள ராமர் கோயில்கள் எத்தனை எத்தனை. இந்தக் காவேரி தீர ரஸிகனான ராமனைக் கல்லிலும் செம்பிலும் வடித்து வைத்திருக்கும் கோலங்கள்தான் எத்தனை, சிற்பக் கலை உலகிலே பிரசித்தி பெற்ற சோழர் காலத்துச் செப்புப் படிமங்கள் {Chola Bronzes) தாம் எத்தனை. இத்தனையையும் பற்றி இன்றே உங்களுக்குச் சொல்லிவிடப் போவதில்லை நான். ஒரு சில கோயில்களை மட்டும் சுட்டிக்காட்டி விட்டு, மற்றவைகளை நீங்களே சென்று காணும் ஆவலைத் தூண்டிவிட்டு விடுவேனானால் அதுவே போதும் என்று மகிழ்வேன் நான்.

தஞ்சை மாவட்டத்தின் தனிச் சிறப்புக்குக் காரணமான தஞ்சைப் பெரிய கோயிலை விட்டு விட்டால் மற்ற கோயில்கள் எல்லாம் ராஜராஜன் காலத்துக்கு முந்தியவை, அவன் காலத்துக்குப் பிந்தியவை என்று

188