பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைச் செல்வம்

இரண்டு பகுதிகளாகப் பார்க்கலாம். மண்ணாலும், மரத்தாலும் கட்டிய கோயில்கள் அழிந்து போய்விடுகின்றன என்பதை அறிந்த பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் மலைகளையே குடைந்து குடைவரைகள் அமைத்தான் என்பது வரலாறு. அவன் அடியொற்றி மலைகளையே வெட்டிச் செதுக்கி ரதங்களையும் கோயில்களையும் உருவாக்கியிருக்கிறான் மகேந்திர வர்மன் மகன் நரசிம்மவர்மன். இவர்கள் வழி வந்த ராஜசிம்மனும், பரமேஸ்வர வர்மனும், காஞ்சியில் கைலாசநாதர் கோயில், வைகுண்டப் பெருமாள் கோயில், மாமல்லையில் கடற்கரைக் கோயில்களைக் கட்டியிருக்கிறார்கள். என்றாலும் உபானம் முதல் ஸ்தூபி வரை கல்லாலேயே கோயில் கட்டிய பெருமை சோழ மன்னர்களுக்கே உரியதாக இருக்கிறது, அப்படிக் கட்டிய கோயில்களில் ராஜராஜன் காலத்துக்கு முந்தியவை சில. அவைகளை - தஞ்சை மாவட்டத்திலுள்ளவைகளை மட்டும் முதலில் உங்களுக்கு இனம் காட்டி விடுகிறேன்.

சரித்திரக் காலத்துக்கு முற்பட்ட சங்க காலத்தில் கோச்செங்கணான் என்பவன் யானை ஏறாத் திருப்படிகள் உடைய மாடக் கோயில்கள் எழுபது கட்டினான் என்பர். எண்தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது கட்டிய பெருமகன் அவன் என்று தெய்வத் திருமுறை கூறும். ஆனால், சரித்திரப் பிரசித்தி பெற்ற சோழ மன்னர்களில் விஜயாலயன், நார்த்தாமலையில் விஜயாலய சோழீச்சரம் கட்டினான் என்பதையும் அறிவோம். அவனே தஞ்சையில் வெண்ணாற்றங்கரையில் துர்க்கைக்கு நிசும்பசூதனி என்ற கோயில்

189