பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைச் செல்வம்

கழகத்துக்கும் உண்டு. அக்கழகத்தை ஒட்டி அறப் பள்ளி, பல நிலை மாடம், அம்பலம் முதலியன எழுந்தன. புத்தர், சமணர் இவர்களிடத்தே காணக் கிடந்த நல்ல கொள்கைகளை நம்மவர் கைக்கொண்டு, இவற்றை நமது மதத்துக்கு அடிப்படையாக்கினர். புத்தர் இருந்த இடத்தே பெருமாள் புகுந்தார். அருகர் இருந்த இடத்தே சிவபெருமான் புகுந்தார். மக்கள் இறைவனை ஒன்றுகூடி, வழிபட்டனர், கூட்ட வழிபாட்டில் கோயில் உருக்கொண்டது. கோயில்களில் கோபுரங்கள், விமானங்கள் எல்லாம் எழுந்தன. இந்த விதமாகத்தான் தமிழ்நாட்டில் கோயில்கள் உருப்பெற்றன என்று சரித்திர ஆசிரியர்கள் நிர்ணயிக்கிறார்கள். ‘பிறவா பாக் கைப் பெரியோன் கோயிலும், அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும், நீலமேனி நெடியோன் கோயிலும், மாலை வெண்குடை மன்னவன் கோயிலும் காவி ரிப்பூம்பட்டினத்தில் தமிழன் கட்டிய கோயில்கள்! நுதல் வழி நாட்டத்து இறையோன் கோயிலும், உவணத் சேவல் உயர்த்தோன் நியமமும், மேழிவேலன் உயர்த்த வெள்ளை நகரமும், கோழிச் சேவல் கொடியோன் கோட்டமும்’ மதுரை மூதூரில் உள்ள கோயில்கள் என்று சிலப்பதிகாரம் கூறும். சிலப்பதிகாரம் தமிழனுடைய தனி இலக்கியம். தமிழருடைய நாகரிகம் தமிழகடைய கலைவளம் எல்லாம் அந்தக் காவியத்தில் நன்கு சித்திரிக்கப்பட்டிருக்கின்றன. சிலப்பதிகார காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்று முடிவு கட்டுகிறாகள். ஆகவே, இன்றைக்கு 1800 ஆண்டுகளுக்கு முன்னே, தமிழ்நாட்டில் எழுந்த ஒரு காவியத்தில் தமிழ்நாட்டில் அன்று சிறந்திருந்த கோயில்களை பற்றி ஆசிரியர் இளங்கோவடிகள் பிரஸ்தாபித்திருக்கிறார். ஆனால், இந்த இலக்கியக் கோயில்களில் பல இன்று காணக் கிடைக்கவில்லை, காரணம், அதை மரத்தாலும், சுதையாலும், செங்கல்லாலும் கட்டப்பட்டு காலகதியில் அழிந்து போயிருக்க வேண்டும் என்றே கருத வேண்டியிருக்கிறது.

195