பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

கின்றன. பிரமரந்திர தளக்கல் ஒரே கருங்கல். 26 அடி சதுரமுடையது. நிறை 80 டன். இதனை, தஞ்சைக்கு நான்கு மைலுக்கு அப்பாலுள்ள சாரப்பள்ளம் என்ற கிராமத்திலிருந்தே சாரம் போட்டு இச்சிகரத்தில் ஏற்றியிருக்கிறார்கள். ராஜராஜன் அளவு கடந்து சைவப்பற்று உடையவன் என்றாலும் விசாலமான மதக் கோட்பாடும் உடையவன். இதை நாம் கோயில் விமானங்களிலும் மற்றும் பல பாகங்களில் காணும் சைவ வைஷ்ணவ பௌத்த உருவச் சிலைகள், சிற்ப வடிவங்கள் ஆகிய வற்றிலும் அறிகிறோம்.

இராஜராஜனுக்குப் பிறகு, அவன் மைந்தன் ராஜேந்திரன் (கி.பி. 1014 - 1048) தலை நகரையே தஞ்சையிலிருந்து கங்கை கொண்ட சோழபுரத்துக்கு மாற்றியிருக்கிறான். கங்கை கொண்ட சோழீச்சரம் என்ற கோயிலை அங்கே நிறுவி, அப்பனுக்கு மகன் சளைத்தவனில்லை என்று காட்டியிருக்கிறான். இவர்களின் பின் வந்த சோழ அரசர்களும் தம் முன்னோர் செய்து வந்த நற்பணிகளைத் தொடர்ந்தே நடத்தியிருக்கிறார்கள். சதுர்வேத மங்கலம், ஜயங்கொண்ட சோழபுரம், தாராசுரம் முதலிய ஸ்தலங்களில் உள்ள கோயில்கள் இவர்கள் செய்த சேவைக்குச் சான்று பகர்கின்றன.

பன்னிரண்டு, பதின்மூன்றாம் நூற்றாண்டுகளிலும் சோழ அரசர்கள் தங்கள் கற்பணிகளைக் கைவிட வில்லை. இந்தக் காலத்தில் கட்டிய கோயில்களில்தான் கோபுரங்கள் பிரம்மாண்டமான. உயரத்தில் கட்டப்பட்டன. விமானங்கள் உருவத்திலும் உயரத்திலும் குறைந்தன. மனிதனது சிந்தனை எப்படி வானளாவி உயர்ந்ததோ, அப்படித்தான் கோபுரங்களும் வானளாவி எழுந்தன. தாமரை மலர் போலெல்லாம் தூண்களில் பொதியல்கள் செதுக்கப்பட்டன. பீடங்களில் எல்லாம் மெடுத்த நாக உருவங்கள் காட்சி அளித்தன. சிதம்பரம் நடராஜர் கோயிலின் சில பாகங்களும், திருவண்ணாமலைக் கோயிலும் இந்தக் காலத்தில் கட்டப்பட்டவையே. முந்திய சோழர் புதிய புதிய கோயில்களை

198