பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

சிருஷ்டித்தார்கள். ‘குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்’ உடைய நடராஜரது சிலையிலேதான் எவ்வளவு வசீகரம்! தட்சிணாமூர்த்தியின் மௌன உருவிலேதான் எத்தகைய கம்பீரம்! எத்தகைய அமைதி! வீரபத்திரன் உருவத்தில்தான் எவ்வளவு கோபம்! உள்ளத்தில் எழும் உணர்ச்சிகளை எழுத்தில் வடித்து கவிதையை உருவாக்கினால், அதே உணர்ச்சிகளைக் கல்லிலல்லவர் காட்டுகிறான் தமிழ்நாட்டுச் சிற்பி. கல் சொல்லும் கவிதையைக் கண்ணால் பார்க்கிறோம்; கலைச் செல்வம் நிரம்பிய தமிழ்நாட்டில் தமிழனாய்ப் பிறந்தோமே என்று மனம் பூரிக்கிறோம்.

கடைசியாக ஒரு வார்த்தை: எத்தனை எத்தனையோ மன்னர்கள், எவ்வளவோ பொன்னையும் பொருளையும் அள்ளி அள்ளிக் கொடுத்து கோயில்களைக் கட்டி கலை வளர்த்தார்கள். ஆனால், பொன்னும் மணியும் இல்லாமல் மண்ணும் மணலுமில்லாமல், ஒரு பக்தர் ஒரு பெரிய கோயிலைக் கட்டுவித்தார் தம் மனத்துள்ளேயே. அவர்தான் திருநின்ற ஊரில் தோன்றிய பூசலார் நாயனார். காஞ்சிபுரத்தில் ராஜசிம்மன் கட்டிய கோயிலில் இறைவனைப் பிரதிஷ்டை செய்யவிருந்த அதே முகூர்த்தத்தில் இறைவன் பூசலார் மனத்துள் கட்டிய கோயிலில் எழுந்தருளப் போய்விட்டார். பூசலார் உள்ளத்தில் நினைத்து நினைத்துக் கட்டிய கோயில், காடவர் கோன் பொன்னாலும் மணியாலும் கட்டிய கோயிலைவிடச் சிறந்த கோயிலென்றே இறைவன் கண்டான். கலை வாழ்வை அறியாத நாமும், மொட்டைக் கோபுரத்தையும் ஊசிக் கோபுரத்தையும் கட்டுவதைக் காட்டிலும் பூசலாரைப் போலவே, உள்ளத்துக்குள்ளேயே பெரிய பெரிய கோயில்களை எழுப்பலாம். ‘இலங்கும் உயிரனைத்தும் ஈசன் கோயில்’ என்று பாடித்தானே நமது முன்னோர் நமக்குப் பக்தியைப் புகட்டி வைத்திருக்கிறார்கள்.

200