பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைச் செல்வம்

அதன் கூரை 50 அடி உயரத்தில் கஜப்பிரஷ்ட ஆகிருதி உடையது. இந்த சைத்தியத்தின் மத்தியில் பதினாறு அடி உயரத்தில் ஒரு ஸ்தூபம்; அந்த ஸ்தூபத்தின் முன்னால் பன்னிரெண்டடி உயரத்தில் ஒரு புத்த விக்கிரகம் உட்கார்ந்திருக்கும் பாணியில் அதனை உருவாக்கியிருக்கிறான் சிற்பி. போதி மரத்தடியில் ஞானோதயம் பெற்ற நிலையில் புத்த பகவான் அங்கே இருந்து நமக்குக் காட்சி தருகிறார். விதானங்களில் எல்லாம் கந்தருவர்களும் வித்யாதரர்களும் அந்த சைத்தியத்தில் நின்று கொண்டு மெதுவாக 'புத்தம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி, தர்மம் சரணம் கச்சாமி' என்று சொன்னால் அந்த ஒலி எதிரொலித்து நம் காதுகளை மாத்திரம் அல்ல, நம் உள்ளத்தையே பரவசப்படுத்தும். அங்குள்ள புத்த பகவானுக்கு நம் வணக்கத்தைச் செலுத்தி விட்டு கொஞ்சம் காலை எட்டிப் போட்டால் பதினாறாவது குடைவரை வந்து சேருவோம். அதுதான் உலகப் பிரசித்தி பெற்ற கைலாயக் குடைவரை. இக்குடைவரைதான் உலகம் முழுவதிலும் உள்ள மிகச் சிறந்த குடைவரை என்று கலைஞர்கள் கூறுகிறார்கள். இக்குடைவரை மற்றைய குடைவரைகளைப் போல மலைச்சரிவின் பக்கத்திலிருந்து குடைந்து எடுக்கப்பட்டது அன்று. வானுலகில் இருந்து இறங்கிய விஸ்வகர்மன் ஒரு மலையின் உச்சியில் இறங்கியிருக்கிறான். அவன் இறங்கிய இடத்திலிருந்து மலையை வெட்டிச் செதுக்கியே பூமியின் தளத்திற்கு வந்திருக்கிறான். இதனால் சாரம் கட்ட வேண்டிய நிர்ப்பந்தம் எல்லாம் இல்லாமல் அவனால் இக்குடைவரை அமைக்க முடிந்திருக்கிறது. இக்குடைவரையை உரு

31