பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்


வாக்கக் குறைந்தது ஒரு நூறு வருஷமாவது ஆகியிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. இக்குடைவரையைக் குடைந்து கிட்டத்தட்ட 300 லட்சம் கன அடியுடைய கற்களை அப்புறப்படுத்தியிருக்க வேண்டும் என்றும் கணக்கிடுகின்றனர், இது. எல்லாம் அதிசய சாதனைதான். என்றாலும் இப்படி ஒரு குடை வரையை உருவாக்கத் திட்டமிடுவதற்கு எவ்வளவு சிந்தனை செய்திருக்க வேண்டும், எவ்வளவு கற்பனை அந்தச் சிந்தனையில் உதித்திருக்க வேண்டும் என்றெல்லாம் நம்மால் கற்பனை பண்ணவே இயலவில்லை. இக்குடைவரை மற்றக் குடைவரைகளைப் போல் அல்லாமல் ஒரு பெரிய வெளிப் பிரகாரம் அமைத்து அந்தப் பிரகாரத்தின் நடுவிலே 150 அடி நீளமும் 100 அடி அகலமும் உள்ள ஒரு பெரிய கோயில் ஒன்றையே உருவாக்கியிருக்கிறான். பிரதான கோயிலே சோழ நாட்டு மாடக் கோயிலைப் போல 25 அடி மாடத்தின் மேல்தான் செதுக்கப்பட்டிருக்கிறது. அந்த 25 அடி உயரம் உள்ள மலைச் சுவர்களில் எல்லாம் யானைகளும் யாளிகளும், சிங்கங்களும் உருவாகியிருக்கின்றன. இந்தக் கைலாயத்தை உருவாக்குவதற்கு கற்பனை, அன்று இராவணன் கைலை மலையையே அசைத்த கதை நின்று உதவியிருக்கிறது.

கறித்தவன் கண் சிவந்து
கயிலை நன்மலையைக் கையால்
மறித்தலும் மங்கை அஞ்ச
வான்வர் இறைவன் நக்கு
நெறித்தொரு விரலால் ஊன்ற
நெடுவரை போல வீழ்ந்தான்

32