பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

ஜான்சி வழியாகச் செல்லலாம், கஜுராஹோ... கஜுராஹோ என்றால் என்ன? அதன் பெயர் நம் வாயில் நுழையமாட்டேன் என்கிறதே என்று நீங்கள் முணுமுணுப்பது என் காதில் கேட்கிறது. நம் நாட்டில் காணும் ஈச்சமரங்களை அந்தப் பிரதேசங்களில் கஜுர் மரங்கள் என்கின்றனர். அங்குள்ள கோயில் கதவுகளில் தங்க கஜுர் மரங்கள் இரண்டு இடம் பெற்றிருந்ததின் காரணமாக இந்தப் பெயர் வந்தது என்று வரலாறு கூறுகிறது. அதைவிட ஒரு காலத்தில் கஜுர் மரங்கள் நிறைந்து அடர்ந்த காடாக அந்தப் பிரதேசம் இருந்திருக்க வேண்டும், அதனால் அந்த வட்டாரத்தை கஜுராஹோ என்று அழைத்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது எனக்கு.

இங்குள்ள கோயில்கள் எல்லாம் ஒரு பெரிய ஏரியைச் சுற்றி நிற்கின்றன என்று ஒரு வர்ணனை. இன்று அந்தப் பிரதேசத்தில் உள்ள கஜுர் சாகர், நிறோறாதால் என்று கூறப்படும் ஏரியையே அன்று அப்படிக் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது. பத்தாம் நூற்றாண்டில் இந்த கஜுராஹோ ஒரு பெரிய நகராக இருந்திருக்க வேண்டும். அப்போது அந்தப் பிரதேசத்தை ஆண்ட சண்டேலா மன்னர்களே, இங்குள்ள கோயில்களைக் கட்டியவர்கள் என்று வரலாறு கூறுகிறது. இந்த சண்டேலா மன்னர்கள் ரஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். சந்திர வம்சத்து அரசர்கள் என்று தங்களைக் கூறிக் கொண்ட்தின் காரணமாகவே இவர்களைச் சரித்திரம், சண்டேலா வம்சத்தவர் என்று அழைக்கிறது. இவர்கள் அந்த வட்டாரத்தில், எட்டு மைல் சதுர வெளியுள்ள பரப்பில் 85 கோயில்களைக் கட்டினார்கள் என்று சொல்லப்படுகிறது.

40