உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைச் செல்வம்



ஆனால், இன்று இருப்பவை எல்லாம் இருபது கோயில்களே. இவைகளே, அந்த மன்னர்களின் கலை ஆர்வத்தை விளக்கப் போதியதாகும். இக்கோயில்கள் எல்லாம் கி.பி. 950 முதல் 1050 வரை உள்ள ஒரு நூறு வருஷ காலத்திற்குள்ளேயே கட்டப்பட்டவை என்றும் தெரிகிறது. இந்த மன்னர் பரம்பரையில் முந்தியவர்கள் எல்லாம் நல்ல விஷ்ணு பக்தர்களாக இருந்திருக்கின்றனர். பிந்தியவர்களோ சிவ பக்தர்கள். ஆதலால் விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் பல கோயில்கள் கட்டப் பெற்றிருக்கின்றன. இப்படி இவர்கள் சைவ - வைஷ்ணவ பக்தர்களாக இருந்தாலும், பௌத்தம், சமணம் முதலிய பிற மதங்களையும் வெறுத்தவர்களாகக் காணோம். இன்றும் கஜுராஹோவில் உள்ள சிறப்பான கோயில்கள் சமணக் கோயில்களாக இருப் பதைக் காண்கிறோம்.

இங்குள்ள கோயில்களில் சௌசத்யோகினி என்ற கோயில் ஒன்றே கஜுரா சாகர் கரையில் இருக்கிறது. அக்கோயில் சோழர் காலத்துக் கற்றளிகள் போல் முழுவதும் நல்ல கருங்கல்லாலேயே கட்டப்பட்டது. மற்ற கோயில்கள் எல்லாம் மஞ்சள் கலந்த சிவப்பு நிறக் கற்களாலேயே கட்டப்பட்டவை. இக்கல் லையே Buff coloured sand stone என்கின்றனர்.

நுணுக்க வேலைப்பாடுகள் செய்வதற்கே ஏற்றவகையில் அவை சிற்றுளிக்கு ஈடு கொடுத்து, நிற்கக் கூடியவை என்றும் தெரிகிறது. இக்கோயில்களுக்குப் பெரிய மதில்கள் ஒன்றும் கிடையாது. பிரம்மாண்டமான அளவிலும் அமைந்தவை அல்ல. இங்குள்ள பெரிய கோயிலான கந்தூரியா மகாதேவர் கோயிலே

41