பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைச் செல்வம்

எத்தனை சங்கீத விற்பன்னர்கள், எத்தனை வாத்தியங்களை வாசித்துக் கொண்டு நிற்கின்றனர். ஒருவரை ஒருவர் நெருக்கமாகவே அணைத்துக் கொண்டிருக்கும் காதலர் வடிவங்கள் தாம் எத்தனை எத்தனை? இன்னும் விண்ணில் பறக்கும் கந்தருவர்கள், யக்ஷ யக்ஷிகள் என்னும் பல வடிவங்கள் நிறைந்ததாக அத்தோரண வாயில் அமைந்திருக்கிறது. கோயில் சுவரில் எல்லாம் காத்திரமான நல்ல சிற்ப வடிவங்கள் பட்டை பட்டையாக மூன்று நான்கு அடுக்குகளில் காணப்படுகிறது. இவைகளில் எல்லாம் சிறப்பாயிருப்பவை பெண்களின் வடிவங்களே. அப்பெண்களின் அங்கங்கள் ஒவ்வொன்றுமே உயிர்த் துடிப்போடு விளங்கும். பார்க்கும் ஆடவர், உள்ளத்தை எல்லாம் கொள்ளை கொள்ளும், இவர்களுக்கு இடையில் கோயிலில் கருவறையிலே சலவைக் கல்லாலே லிங்க உருவில் மகாதேவர் எழுந்தருளியிருப்பார்.

இக்கோயிலுக்கு வடபுறமே தேவி ஜகதாம்பாள் கோயில். ஆதியில் இக்கோயிலில் மகாவிஷ்ணுவே பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்திருக்கிறார். பின்னரே அவரை எடுத்துவிட்டு கருத்த வடிவமான காளியைப் பிரதிஷ்டை செய்து, அவளை ஜகதாம்பாள் என்று அழைத்திருக்கின்றனர். இக்கோயிலுக்கு வடபுறம் உள்ள கோயிலை சித்த குப்தர் கோயில் என்கின்றனர். அங்கே மூல மூர்த்தியாய் நிற்பவர் சூரிய நாராயணனே. 5 அடி உயரத்தில் கம்பீரமாக ஏழு குதிரை பூட்டிய தேரில் ஏறிக் கொண்டு பவனி வருகிறார். இந்த இரண்டு கோயில் சுவர்களிலுமே எண்ணற்ற சிற்ப வடிவங்கள்.

43