பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைச் செல்வம்

களைச் செதுக்கிக் கோயில்களை உருவாக்கியிருக்கிற திறனைக் கண்டு வியக்காமல் இருக்க முடியாது. நான் இமயத்தின் சிகரத்திலுள்ள சிம்லா சென்றிருந்த போது, அங்குள்ள தையல்காரர்கள் சிலர், துணிகளிலே நுண்ணிதமான சித்திரத் தையல் வேலை செய்வதைக் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். ஒரிசா ராஜ்யத்தில் கட்டாக் நகர் சென்றிருந்தபோது, அங்கு வெள்ளியில் குங்குமச் சிமிழ், ஜிமிக்கி, கைப்பைகள் எல்லாம் செய்யும் ‘பிலிகிரி’ வேலையின் நுணுக்கத்தைக் கண்டு அதிசயித்திருக்கிறேன். ஆனால், இந்த அதிசயத்தை எல்லாம் தூக்கி அடிக்கும் வகையில், கல்லிலே கலை வண்ணம், அதுவும் மிக மிக நுண்ணிய முறையில் ஹொய்சலச் சிற்பிகள் காட்டுவதைப் பார்த்து மூர்ச்சித்தே விழுந்திருக்கிறேன். இந்த ஹொய்சலர் கோயில்கள் எல்லாம் அற்புதம் அற்புதமான கலைக் கோயில்கள். அவர்கள் கட்டிய கோயில்கள் பல இருந்தாலும், மூன்றே கோயில்களுக்கு மட்டும் உங்களை அழைத்துச் சென்று அங்குள்ள கலை அழகைக் காட்ட முனைகிறேன் இன்று.

தமிழ்நாட்டில் ராஜராஜன் முதலிய சோழ மன்னர்கள் அகண்ட ராஜ்யம் ஒன்றை நிறுவி ஆட்சி செய்து வந்தபோது கிருஷ்ணா நதிக்குத் தென்புறம் உள்ள மைசூர் பிரதேசத்தை ஹொய்சலர் மன்னர்கள் ஆண்டிருக்கிறார்கள். கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டிலிருந்து பதினான்காம் நூற்றாண்டு வரை இவர்கள் ஆட்சி புரிந்திருக்கிறார்கள், அவர்களது தலைநகரம் துவார சமுத்திரம் என்ற இடத்தில் இருந்திருக்கிறது. அந்தத் துவாரசமுத்திரம் தான் ஹலபேடு என்று இன்று அழைக்கப்படுகிறது.

51